Published : 22 Oct 2020 08:40 PM
Last Updated : 22 Oct 2020 08:40 PM
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநரையும், அதற்கு அழுத்தம் தரத் தவறி, மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் அதிமுக அரசையும் கண்டித்து அக்.24 ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
''மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமனதாக செப்.15 அன்று நிறைவேற்றி, தமிழக ஆளுநருக்கு அனுப்பியும், அவர் அந்த மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்க முன்வரவில்லை.
அவசர - அவசியத் தன்மையினைப் புறக்கணித்திடும் இந்த அணுகுமுறை, சமூக நீதிக்கும், ஜனநாயகத்தின் மகேசர்களான வெகுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைக்கப்பட்டிருக்கும் தமிழகச் சட்டப்பேரவையின் மாண்புகளுக்கும், மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
ஒரு மாதத்திற்கும் மேல் இந்த மசோதா மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பதால் - தற்போது அறிவிக்கப்பட்டுள்ள “நீட்” தேர்வில் வெற்றி பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவக் கல்வியை நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடியை, மத்திய பாஜக அரசின் அறிவுரையின் பேரில் தமிழக ஆளுநரும், இதை ஆணித்தரமாக எதிர்த்துப் பேச முடியாமல், உள்நோக்கத்துடன் எப்போதும் அடங்கிப் போகும் முதல்வர் பழனிசாமியும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் திமுக சார்பில் தமிழக ஆளுநருக்கு நேற்று (21.10.2020) கடிதம் எழுதி, “முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்குங்கள்” என்று பெரிதும் வலியுறுத்தினேன். திமுக சார்பில் எழுதிய எனது கடிதத்திற்கு இன்றைய தினம் பதிலளித்துள்ள தமிழக ஆளுநர், “நீட் முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு மசோதா குறித்து அனைத்துக் கோணங்களிலும் கலந்தாலோசனை நடத்தி வருகிறேன். இதுகுறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே ஒருமாத காலம் அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், குறைந்தபட்சம் மேலும் ஒரு மாதம் என்பது 7.5% முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நீர்த்துப் போக வைப்பதாகும். அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும்.
அதே கடிதத்தில், “மூன்று அல்லது நான்கு வாரங்கள் தேவை என்பதைத் தன்னைச் சந்தித்த தமிழக அமைச்சர்கள் குழுவிடமும் தெரிவித்திருக்கிறேன்” என்றும் ஆளுநர் கூறியுள்ளார். ஆனால், ஆளுநரைச் சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் குழு, “கால அவகாசம் வேண்டும்” என்று ஆளுநர் சொன்னதையே தமிழக மக்களிடமிருந்து திட்டமிட்டு மறைத்து விட்டார்கள்.
இது ஒருபுறமிருக்க, “பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துங்கள். இந்த மசோதாவிற்கு ஒப்புதல் தருகிறேன்” என்று ஆளுநர் தமிழக அமைச்சர்களிடம் சொன்னதாகவும் ஒரு செய்தி வலம் வருகிறது. சமூக நீதியைச் சீர்குலைக்கும் அப்படியொரு கருத்து, அந்த சந்திப்பில் முன் வைக்கப்பட்டதா என்பதை அமைச்சர்கள் குழு உடனடியாக தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
“இந்த 7.5% முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் பெற அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார்” என்றும்; “அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து முதல்வர் என்ன வகையான போராட்டம், எந்தத் தேதியில் போராட்டம் என்பதை அறிவிக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
ஆனால், ஆளுநர் சொன்னதை மறைத்தது மட்டுமின்றி - அப்படியொரு போராட்டத்தை நடத்துவதற்கும் இதுவரை முதல்வர் பழனிசாமி முன்வரவில்லை. எதை எதையோ பற்றி வாய் திறந்துவரும் முதல்வர், இது குறித்து ஏன் இப்படி மவுனம் சாதிக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
மேலும் அவரது அமைதி, மத்திய பாஜக அரசை எதிர்த்து - அந்த அரசின் கண் அசைவின்படி அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநரை எதிர்த்துப் போராடுவதற்கு பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை என்பதையே காட்டுகிறது.
16.10.2020 அன்றே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது. கல்லூரிகளில் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான “கட் ஆஃப்” தேதியை மத்திய அரசே நிர்ணயிப்பதால் - ஆளுநர் கோரும் ஒரு மாத கால அவகாசம் வரை மாநில அரசால் மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தாமல் - மாணவர்கள் சேர்க்கையை அனுமதிக்காமல் இருக்க முடியுமா என்பது “பெருத்த ஐயப்பாட்டுக்குரிய கேள்வி”யாக இருக்கிறது!
ஆகவே, அதிமுக அரசின் ஒத்துழையாமையைப் பற்றியும், அக்கறையற்ற போக்கைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில்; தமிழக மாணவர்களின் நலனையும் - சட்டப்பேரவையின் மாண்பினையும் பாதுகாக்கும் போராட்டத்தில் திமுகவே நேரடியாகக் களத்தில் இறங்க வேண்டிய தருணம், தவிர்க்க முடியாமல் வந்துவிட்டது.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும் - தமிழக ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கத் தவறி, மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் எடப்பாடி அதிமுக அரசைக் கண்டித்தும் அக்.24 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் திமுக சார்பில், ஆளுநர் மாளிகை முன்பு “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்தப்படும்''.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT