Published : 22 Oct 2020 05:44 PM
Last Updated : 22 Oct 2020 05:44 PM

தமிழ் திரைப்படங்களை ஓடிடியில் வெளியிடுவது தற்காலிகம் என்றால் வரவேற்கத்தக்கது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடியில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்.

கோவில்பட்டி 

தமிழ் திரைப்படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடுவது தற்காலிகம் என்றால் வரவேற்கத்தக்கது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி, கயத்தாறில் கால்நடை கிளை நிலையங்கள் திறப்பு விழா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் மக்கள் நலத்திட்ட தொடக்க விழா நடந்தது.

கயத்தாறு ஒன்றியம் சன்னது புதுக்குடி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, கால்நடை பராமரிப்பு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து ராஜாபுதுக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.33 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியின்போது, கயத்தாறு அருகே தலையால்நடந்தான்குளத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பாலமுருகனின் மனைவி அபிராமி பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை அமைச்சர்கள் வழங்கினர்.

தொடர்ந்து கயத்தாறு ஒன்றியம் ராஜாபுதுக்குடி, பன்னீர்குளம், வெள்ளாங்கோட்டை, கோவில்பட்டி ஒன்றியம் இலுப்பையூரணி, விளாத்திகுளம் அருகே சின்னவநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் கால்நடை கிளை நிலையங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

அப்போது கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து பெட்டகத்தை கிராம மக்களுக்கு வழங்கினர்.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாகுவதைத் தடுக்க தனி சட்டம் இல்லை.

கரோனா ஊரடங்கு காலத்தில் வேறு வழியில்லாமல் அதிக முதலீடு செய்து நீண்டகாலமாக திரையிடப்படாமல் உள்ளதால் மிகுந்த மனவருத்தத்தோடு ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம் என ஏற்கெனவே படங்களை வெளியிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால், திரையரங்குகள் திறக்கும் வரை, இது இடைக்கால ஏற்பாடாக இருந்தால் வரவேற்கத்தக்கது. தமிழ் திரைப்படத்துறை அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் வளர்ச்சியடைய தமிழக அரசு உதவி செய்யும்" என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x