Published : 22 Oct 2020 05:18 PM
Last Updated : 22 Oct 2020 05:18 PM
வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டுக்காக நடத்தவிருக்கும் போராட்டம் வரலாறு காணாத வகையில் அமையும். போராட்டத்தின் போதே, ‘போராட்டத்தைக் கைவிட்டு வாருங்கள்... வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டுக்கான உடன்பாட்டில் கையெழுத்திடுங்கள்’ என்று அரசு நமக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் கடுமையாக அமையும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட முகநூல் பதிவு:
“தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களைச் செய்து இருக்கிறோம்; 21 இன்னுயிர்களை இழந்திருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டைக் கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களும், இப்போது ஆட்சி செய்பவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
மீண்டும் ஒரு போராட்டம் நடத்தித்தான் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றால் அதற்கும் நாம் தயாராகவே இருக்கிறோம். கரோனா பாதிப்புகள் ஓரளவு குறைந்த பின்னர் புத்தாண்டில் வன்னியர்களுக்கான 20% தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டம் தொடங்கப்படும். வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கோரி 1987 ஆம் ஆண்டில் ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தி 33 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
அந்தப் போராட்டம் குறித்த வரலாறுகள் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது; அந்த உணர்வுகளை அவர்கள் அனுபவித்திருக்க மாட்டார்கள். அந்தப் போராட்டத்தின்போது நாங்கள் பிறந்திருக்கவில்லையே என ஏராளமான இளைஞர்கள் ஏங்குவது எனக்குத் தெரியும். எங்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் சமுதாய நலனுக்காக மீண்டும் ஒரு போராட்டம் நடத்த மாட்டீர்களா அய்யா? என்று பலரும் என்னிடமே கேட்டிருக்கிறார்கள்.
அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும் நாள் வந்துவிட்டது. நமது உரிமைகளுக்காக நாம் போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டுக்காக இப்போது நாம் நடத்தவிருக்கும் போராட்டம் வரலாறு காணாத வகையில் அமையும். போராட்டத்தின் போதே, 'போராட்டத்தைக் கைவிட்டு வாருங்கள்... வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டுக்கான உடன்பாட்டில் கையெழுத்திடுங்கள்' என்று அரசு நமக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் கடுமையாக அமையும்.
வன்னியர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்டாளிகள், பாட்டாளி இளைஞர்கள், பாட்டாளி தாய்மார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இப்போதிருந்தே தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT