Published : 22 Oct 2020 04:06 PM
Last Updated : 22 Oct 2020 04:06 PM

எஸ்பிஐ வங்கித்தேர்வு; குறைந்த மதிப்பெண் எளிதான தேர்ச்சி, உயர்வகுப்பு இடஒதுக்கீடு சமூக அநீதி: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை

எஸ்பிஐ வங்கிப்பணி தேர்வில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்பட்டு உயர்வகுப்பு ஏழைகளுக்கு தரப்பட்டுள்ளது, இதை விட மோசமான, நியாயமற்ற, இயற்கைக்கு மாறான சமூக அநீதி வேறு என்ன இருக்க முடியும் என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“பாரத ஸ்டேட் வங்கியின் ஜூனியர் அசோசியேட் எனப்படும் எழுத்தர் நிலையிலான பணிக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை விட குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்வகுப்பு ஏழைகள் முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய அரசுப் பணிகளில் உயர்வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சமூக அநீதி என்பதற்கு இதை விட வெளிப்படையான ஆதாரம் எதுவும் இருக்க முடியாது.

பாரத ஸ்டேட் வங்கிக்கு தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 8000 ஜூனியர் அசோசியேட் எழுத்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதல்நிலைத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 4 கட்டங்களாக நடத்தப்பட்டன. அவற்றின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழ்நாடு மண்டலத்தில் பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர் ஆகிய 3 பிரிவுகளிலும் நூற்றுக்கு 62 மதிப்பெண் தகுதி காண் மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டு, அதற்கும் கூடுதலான மதிப்பெண் பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பழங்குடியினருக்கான தகுதி காண் மதிப்பெண்ணாக 59.50% மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், உயர்வகுப்பு ஏழைகளுக்கு அதைவிட குறைவாக 57.75% மதிப்பெண் தகுதிகாண் மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டு, அதற்கும் கூடுதலான மதிப்பெண் பெற்றவர்கள் வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ள முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றிருக்கின்றனர்.

பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோர் காலம் காலமாக கல்வியிலும், சமூகநிலையிலும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருந்தவர்கள். அவர்களுக்கு பல நூற்றாண்டு காலங்களாக கல்வியும், சமூகத் தகுதியும் மறுக்கப்பட்டு வந்தது. அப்படிப்பட்டவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ, அவர்களை விட குறைந்த மதிப்பெண்களை பெற்றிருக்கும் உயர்சாதி ஏழைகள் முதன்மைத் தேர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றால் அது எந்த வகையில் நியாயம்? இத்தனைக்கும் அவர்கள் கல்வியிலோ, சமூகத் தகுதியிலோ பிற்படுத்தப்பட்டவர்கள் அல்ல.

அவர்கள் காலம்காலமாக அவற்றை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு சமூகத்தின் கடைநிலையில் உள்ளவர்களை விட கூடுதல் சலுகைகளும், முன்னுரிமையும் அளிக்கப்படுவது எந்த வகையில் சமூகநீதி ஆகும்?

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கான முதல்நிலைத் தேர்விலும் தமிழ்நாடு மண்டலத்தில் பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியவற்றுக்கு 61.25% மதிப்பெண்ணும், பழங்குடியினருக்கு 53.75% மதிப்பெண்ணும் தகுதி காண் (கட் ஆஃப்) மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், உயர்வகுப்பு ஏழைகளுக்கான தகுதி காண் (கட் ஆஃப்) மதிப்பெண் மட்டும் 28.50% ஆக நிர்ணயிக்கப்பட்டு முதன்மைத் தேர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது நியாயமா? கடந்த ஆண்டு வினா எழுப்பிய போது, உயர்வகுப்பு ஏழைகளுக்கு இப்போது தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் தேர்வு எழுதியது தான் தகுதி காண் மதிப்பெண் குறைந்தததற்கு காரணம்; அடுத்த ஆண்டில் இது அதிகரிக்கும் என மத்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால், நடப்பாண்டும் பழங்குடியினரை விட குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்வகுப்பினருக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டும் குறைந்த அளவிலான உயர்வகுப்பினர் தான் தேர்வு எழுதினார்கள் என்று வாதிடப்பட்டால், அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவே பொருள் கொள்ள வேண்டும்.

உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்ட காரணங்களில் மிகவும் முக்கியமானது, அவர்களுக்கு திறமையிருந்தும் பிற வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய அளவுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது ஆகும்.

ஆனால், இப்போது தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோரைவிட மிகக்குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ள போதிலும், அவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். சுருக்கமாக கூற வேண்டுமானால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்பட்டு உயர்வகுப்பு ஏழைகளுக்கு தரப்பட்டுள்ளது. இதை விட மோசமான, நியாயமற்ற, இயற்கைக்கு மாறான சமூக அநீதி வேறு என்ன இருக்க முடியும்?

எந்த விதமான சமூக ஆய்வும், புள்ளி விவரங்களும் இல்லாமல் வழங்கப்பட்ட உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10 % இட ஒதுக்கீடு பிற பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினருக்கான சமூக நீதியை பறிக்கின்றன என்பதற்கு இதை விட வேறு ஆதாரங்கள் தேவையில்லை. எனவே, கல்வி & வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ள 10% இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x