Published : 22 Oct 2020 03:54 PM
Last Updated : 22 Oct 2020 03:54 PM
ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனைச் சந்தையில் பெரிய வெங்காயம் வரத்து குறைந்ததால், ஒரு கிலோ விலை ரூ.80 வரை அதிகரித்துள்ளது. இதனால் சில்லரை விற்பனையில் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100 முதல் ரூ.130 வரை பல மடங்கு விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்தலப்பள்ளியில் மொத்த வியாபார காய்கறி சந்தை இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினசரி காய்கறிகள் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த பத்தலப்பள்ளி சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பெரிய வெங்காயத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளில் சில்லரை விலையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த வியாபார சந்தை வியாபாரிகள் கூறியதாவது:
’’கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காய்கறி சந்தைகளில் ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறிச் சந்தை பெரிய சந்தையாகும். இந்த சந்தைக்கு ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த மாலுர், ஆனேக்கல், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வெங்காயம், தக்காளி, முட்டைகோஸ், காலிஃபிளவர், பீன்ஸ், பீட்ரூட், கேரட், வெள்ளரிக்காய், பெரிய மிளகாய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.
இங்கிருந்து காய்கறிகள் தரம் பிரிக்கப்பட்டு மொத்த விற்பனைக்காகச் சென்னை, சேலம், மதுரை, தருமபுரி, நாகர்கோயில், மேட்டூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் தினசரி விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது இந்தச் சந்தைக்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் வெங்காய விற்பனையில் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளத்தில் மூழ்கி வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான வெங்காய வரத்து குறைந்துள்ளது.
பத்தலப்பள்ளி காய்கறிச் சந்தைக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஒரு நாளைக்கு 100 டன் முதல் 150 டன் வரை வந்து கொண்டிருந்த வெங்காயம், மழையின் காரணமாக 20 டன் முதல் 30 டன் வரை குறைந்து விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ வெங்காயம், தற்போது ரூ.80 வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு வெங்காய வியாபாரிக்கு சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மூட்டையில் 50 கிலோ வெங்காயம் என மொத்தம் 300 மூட்டை வெங்காயம் வரை விற்பனையான நிலையில், விலை உயர்வு காரணமாக ஒரு நாளுக்கு 15 மூட்டை வெங்காயம் விற்பனை செய்வதே கடினமாக உள்ளது.
அந்தளவுக்கு வெங்காயத்தின் விற்பனை மிகவும் குறைந்து விட்டது. அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. மேலும் எகிப்து வெங்காயமும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை வெள்ளம் குறைந்து மீண்டும் வெங்காய உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே வெங்காய விலை பழையபடி குறைய வாய்ப்புள்ளது’’.
இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment