Published : 22 Oct 2020 02:39 PM
Last Updated : 22 Oct 2020 02:39 PM

நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து துணைவேந்தர்களுக்கு யுஜிசி கடிதம்; மாநில உரிமையில் தலையிடும் செயல்: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை விமர்சனம்

சென்னை

தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழகம் அமல்படுத்தாத சூழ்நிலையில், துணைவேந்தர்களுக்கு நேரடியாக யுஜிசி கடிதம் எழுதியுள்ளது. மாநிலப் பட்டியலில் பல்கலைக்கழகங்கள் உள்ள நிலையில், இது மாநில உரிமையில் தலையிடும் செயல் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை விமர்சித்துள்ளது.

இதுகுறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தேசியக் கல்விக் கொள்கை 2020 நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பல்கலைக்கழகங்கள் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தி, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அக்டோபர் 20 தேதியிட்ட கடிதம் அனுப்பியுள்ளது.

இக்கடிதம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது. பல்கலைக்கழக நிர்வாகம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ் நாடு அரசு எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு இத்தகைய கடிதம் எழுதுவது நியாயமற்ற அணுகுமுறை.

பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பாக தனக்கு இல்லாத அதிகாரத்தை பல்கலைக்கழக மானியக்குழு தனக்குத் தானே எடுத்துக் கொள்ள முற்படுகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் தரத்தைத் தீர்மானித்து ஒருங்கிணைப்பு என்பதற்கும், பல்கலைக்கழக நிர்வாகச் சீர்திருத்தங்கள் என்பதற்கும் வேறுபாடு உள்ளது.

இக்கடிதம் குறித்து தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்தி, மாநில அரசின் உரிமையையும், மக்களின் நலனையும் காத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”.

இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x