Published : 22 Oct 2020 02:36 PM
Last Updated : 22 Oct 2020 02:36 PM
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் வண்ண ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. புதுப் பொலிவு பெற்ற சுற்றுச்சுவர் இன்று திறப்புவிழா கண்டது. ஆட்சியர் ஷில்பா பிராபகர் சதீஷ் நிகழ்வில் கலந்து கொண்டார்.
அவற்றின் மீது மீண்டும் சுவரொட்டிகளை ஒட்டி அசிங்கப்படுத்தாமல் அரசியல் கட்சியினரும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அக்கறையுன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சுவரொட்டிகளை ஒட்டுவதும், விளம்பரங்களை எழுதுவதுமாக பிரச்சினை நீடித்து வந்தது.
அவ்வப்போது சாதிக் கட்சிகளும், அமைப்புகளும் போட்டிபோட்டு இங்கு சுவரொட்டிகளை ஒட்டுவது மோதலுக்கு வழிவகுக்கும் என்று மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு சமூக ஆர்வலர்கள் கொண்டு சென்றனர்.
கடந்த ஓராண்டுக்குமுன் அவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டன. ஆனாலும் அவ்வப்போது சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் சுவரொட்டிகளை ஒட்டி ஓவியங்களை மறைத்துவந்தன.
கடந்த மாதத்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வருகையின்போது ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் முழுக்க ஆளும் கட்சியினரால் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதனால் ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டும் இடமாக ஆக்கப்பட்டிருந்தது. இது குறித்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களின் கவனத்துக்கு வந்ததை அடுத்து சுவரொட்டிகளைக் கிழித்து அப்புறப்படுத்தி, வெள்ளை வண்ணம் பூசி, ஓவியங்களை வரையும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் வண்ண ஓவியங்களால் அழகுபெற்றுள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், திருநெல்வேலி மாவட்ட பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், தமிழரின் பண்பாடு, நாகரிகம், கலை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.
இந்த ஓவியங்கள் மீது மீண்டும் சுவரொட்டிகளை ஒட்டாமலும், விளம்பரங்களை எழுதாமலும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அக்கறை செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
இது தொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜி. சங்கரநாராயணன் கூறும்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்து வரும் வெளிமாவட்ட, வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்த ஓவியங்களை பார்த்து வியப்பார்கள். அந்த ஓவியங்களையும், சுற்றுச்சுவரையும் அசிங்கப்படுத்தும் வகையில் மீண்டும் சுவரொட்டிகளை ஒட்டுவோர் மீது காவல்துறை மூலம் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் பாரபட்சம் காட்டக்கூடாது.
சுவரொட்டிகளை ஒட்டினால், அவற்றை கிழித்து அப்புறப்படுத்தவும், மீண்டும் ஓவியங்களை வரையவும் ஆகும் செலவை சுவரொட்டிகளை ஒட்டுவோரிடமிருந்து வசூலிக்க வேண்டும்.
தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் நடந்துகொள்வதுபோல் மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தில் கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT