Published : 22 Oct 2020 02:29 PM
Last Updated : 22 Oct 2020 02:29 PM
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் கரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 22) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் 3,847 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-167, காரைக்கால்-20, ஏனாம்-12, மாஹே-13 என மொத்தம் 212 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் ஒருவர், காரைக்காலில் ஒருவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 582 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.72 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 33 ஆயிரத்து 832 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,133 பேர், காரைக்காலில் 279 பேர், ஏனாமில் 40 பேர், மாஹேவில் 65 பேர் என 2,517 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல் புதுச்சேரியில் 1,370 பேர், காரைக்காலில் 49 பேர், ஏனாமில் 49 பேர், மாஹேவில் 54 பேர் என 1,522 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 4,039 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 161 பேர், காரைக்காலில் 12 பேர், ஏனாமில் 4 பேர், மாஹேவில் 18 பேர் என 195 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 211 (86.34 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2 லட்சத்து 78 ஆயிரத்து 193 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 23 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
தற்போது பெரும்பாலான கரோனா நோயாளிகளைக் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்புகிறோம். காரணம் அங்கு அதிக அளவு படுக்கைகள் காலியாக உள்ளன. நான் சுகாதாரத்துறைச் செயலாளர் மற்றும் இயக்குநரிடம் ஏற்கெனவே படுக்கை கிடைக்காமல் இருக்கின்ற நோயாளிகளுக்குக் கொடுக்க குறைந்தது 50 படுக்கைகள் வரை காலியாக வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்.
முன்பு வென்டிலேட்டர், ஆக்ஸிஜன் தேவையான நோயாளிகள் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, ஜிப்மரில் வைக்கப்பட்டனர். தற்போது அது குறைந்துள்ளது. நமது மருத்துவக் கல்லூரியில் தேவையான ஊழியர்கள் உள்ளனர். ஆகவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிக நோயாளிகளை அனுப்ப வேண்டாம் என்றும், தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளேன்.
கடந்த ஒன்றரை மாதங்களாக சுகாதாரத்துறை சிறப்பான முறையில் பணி மேற்கொண்டு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கரோனா தொற்று புதுச்சேரியில் கட்டுப்பாட்டில் இருக்கிறது".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT