Published : 22 Oct 2020 12:56 PM
Last Updated : 22 Oct 2020 12:56 PM
மழைக் காலங்களில் மின் விபத்தால் உயிர் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கோவை மின் பகிர்மான வட்டம் தெரிவித்துள்ளது.
கோவை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் எல்.ஸ்டாலின் பாபு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
'' * மழைக் காலங்களில் மின் விபத்தால் உயிர் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
* மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டும்பொழுது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்து, மின்தடை செய்த பின்னரே கிளைகளை வெட்ட வேண்டும்.
* மழைக் காலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், இழுவைக் கம்பிகள் அருகே செல்லக்கூடாது.
* தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும். மின் கம்பத்தின அருகில் உள்ள இழுவைக் கம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறு கட்டித் துணிகளை உலர்த்தக் கூடாது.
* மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்ட வேண்டாம்.
* மின்கம்பி அறுந்து கிடந்தால் மிதிக்காமலும், தொடாமலும் இருக்க வேண்டும். உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
* இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோகக் கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.
* மின் கம்பங்களைப் பந்தல் அமைப்பதற்கோ, விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கோ பயன்படுத்தக் கூடாது. கனரக வாகனங்களை மின் கம்பிகளின் அருகிலோ, மின் மாற்றியின் அருகிலோ நிறுத்திச் சரக்குகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது.
* வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உடனே உலர்ந்த ரப்பர் காலணிகளை அணிந்து மெயின் சுவிட்சை அணைத்து, மின் வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
* வீடுகளில் ஈரமான இடத்தில் மின் சுவிட்சுகளைப் பொருத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க வேண்டாம்.
* ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மற்றும் விளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது.
* இடி, மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி உள்ளிட்ட மின்சாதனக் கருவிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
* ரெஃப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டால், தண்ணீர் ஊற்றி அணைக்க முயலக் கூடாது.
* மழைக் காலங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வோடும் மிகுந்த முன் எச்சரிக்கையுடனும் செயல்பட்டு, மின் விபத்துக்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்''.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT