Published : 22 Oct 2020 01:03 PM
Last Updated : 22 Oct 2020 01:03 PM
இப்போதெல்லாம் யார் வீட்டுக்கு விருந்தினராகச் சென்றாலும் வழக்கமாக அளிக்கப்படும் தேநீர், காபிக்குப் பதிலாக இஞ்சி, எலுமிச்சைச் சாறு, துளசி நீர், கபசுரக் குடிநீர், நிலவேம்புக் கசாயம் அளிக்கப்படுவதை உணர்ந்து இருப்பீர்கள்.
ஏன் இந்த மாற்றம் என சித்த மருந்துக் கடை வைத்திருப்பவர்களிடம் விசாரித்தோம்.
''உலகமே கரோனா அச்சத்தில் உறைந்து கிடக்கும் இக்காலக்கட்டத்தில் அலோபதி மருத்துவத்தில் இருந்து லேசாக விலகிக் கொண்டு சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்றவற்றின் பக்கம் மக்களின் கவனம் திசை திரும்பத் தொடங்கி இருக்கிறது.
இந்த மருத்துவ முறைகள் எல்லாம் ஏதோ இப்போதுதான் புதிதாகத் தோன்றியதாக எண்ணிவிடக்கூடாது.
இவைதான் இந்திய மண்ணில் ஏற்கெனவே இருந்த மருத்துவ முறைகள்தான். அலோபதி மருத்துவம் என்பது ஆங்கிலேயர்கள் வந்தபோது கையோடு எடுத்துக்கொண்ட வந்த மருத்துவ முறையாகும். போர்களின் போது காயம் அடைகிற ராணுவத்தினரை விரைவாக குணப்படுத்தி மீண்டும் போருக்கு அனுப்புவதற்கு தேவையான ஒரு உடனடி மருத்துவ முறையாகத்தான் ரசாயனங்களின் உதவியுடன் இந்த அலோபதி மருத்துவ முறை உருவானது.
உலகில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர் , அலோபதி உட்பட 64 மருத்துவ முறைகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஆனால், அவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அலோபதி மருத்துவம் எப்படி உலகில் முதல் இடத்தைப் பிடித்தது என்கிறது அ.உமர் பாருக் எழுதியுள்ள 'ஆதுர சாலை' என்கிற புதினம்.
பொதுவாக சித்த மருத்துவக் கடைகள் வெறிச்சோடிதான் கிடக்கும். ஆனால், இந்தக் கரோனா காலத்தில் இக்கடையில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து மருந்துகளை வாங்கிச் செல்கிறார்கள். கடையில் எப்போதும் கூட்டமாகவே இருக்கிறது. சளி, இருமல், தலைவலி, உடல்வலி, காய்ச்சல் போன்ற சாதாரண உபாதைகளுக்கு என்ன மருந்து சாப்பிட்டால் சரியாகும் என்று அங்கிருக்கும் சித்த மருத்துவரிடம் கேட்டு பை நிறைய வாங்குகிறார்கள். கடைக்காரர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
தொல்காப்பியர் காலத்தில் எழுதப்பட்ட அறிவன் மருத்துவம் என்ற சித்த மருத்துவ நூல் சித்தர்களால் எழுதப்பட்டுள்ளது. தமிழ் மன்னர்கள் தாங்கள் கட்டிய கோயில்களில் சித்த மருத்துவ நிலையங்களை நிறுவியிருந்தனர் என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. தற்போது, திருச்செந்தூர், வடபழனி முருகன் கோயில்களில் இயங்கிக்கொண்டிருக்கும் சித்த மருத்துவ நிலையங்களே அதற்குச் சாட்சிகளாக விளங்குகின்றன.
மேலும், தமிழக அரசு 'டாம்கால்' என்ற நிறுவனத்தைத் தொடங்கியது. தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன், சித்தா, ஆயுர்வேத முறையில் கரோனாவுக்குச் சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது'' என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசு சித்த மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவர்களிடம் கேட்டபோது, "கரோனா தொற்றாளர்களுக்கு தினசரி காலை, மாலை வேளைகளில் கபசுரக் குடிநீர், இஞ்சி சாறு, மூலிகைத் தேநீர் வழங்கப்படுகிறது. தொடக்கத்திலேயே ஹோமியோபதி மாத்திரை வழங்கப்படுகிறது. மேலும் அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு வசந்த குசுமராகரம், பிரம்மானந்த பைரவ மாத்திரைகள், திரிகடுகம், நிலவேம்பு, திரிபலா சூரணம், ஆடாதொடை, மாதுளை டானிக் லேகியம் வழங்கப்பட்டு வருகிறது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT