Last Updated : 22 Oct, 2020 12:19 PM

 

Published : 22 Oct 2020 12:19 PM
Last Updated : 22 Oct 2020 12:19 PM

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் பணி; தேர்தல் அதிகாரியை நியமித்தார் கிரண்பேடி

கிரண்பேடி: கோப்புப்படம்

புதுச்சேரி

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவுப்படி, புதுச்சேரி மாநிலத் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரியான ராய் பி தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் இதுவரை இருமுறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2011 முதல் பத்து ஆண்டுகளாக இத்தேர்தல் நடைபெறவில்லை. புதுச்சேரி அமைச்சரவைக்குத் தெரியாமல் கடந்த ஆண்டு ஜூலையில் உள்ளாட்சித் தேர்தல் ஆணையரை நியமிக்க அறிவிப்பு வெளியானது. அதன் பின்புலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து சட்டப்பேரவையைக் கூட்டி புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணனை முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

கடந்த டிசம்பர் 20-ம் தேதி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமித்தது செல்லாது என்று ஆளுநர் கிரண்பேடி ஒரு ஆணையை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, மாநிலத் தேர்தல் ஆணையரை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்று ஜன.7 அன்று உள்ளாட்சித் துறை விளம்பரம் வெளியிட்டது.

இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அவ்வழக்கு மார்ச் மாதத்தில் தள்ளுபடியானது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரியான ராய் பி தாமஸை ஆளுநர் கிரண்பேடி நேற்று (அக். 21) நியமித்துள்ளார்.

இது தொடர்பாக கிரண்பேடியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (அக். 22) வாட்ஸ் அப்பில் வெளியிட்ட தகவல்:

"கடந்த மே 8-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நான்கு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறும், தாமதம் கூடாது என்றும் கடுமையாக எச்சரித்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் நீதிமன்ற அவமதிப்பை அரசு செய்து வருகிறது.

தனிப்பட்ட விருப்பத்தினால் உள்ளாட்சி அமைப்புகளை விரும்பவில்லை. மக்கள் இப்போது கூடுதலான விழிப்புடன் இருக்க வேண்டும்.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும். அதனால் அடிப்படை ஜனநாயகம் மீண்டும் நிகழ வேண்டும். இதை திட்டமிட்டுச் செயல்படுத்தும்போது நிதி, செயல்பாடுகள் நிகழும். ஆனால், இது 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.

கோவிட் மேலாண்மையுடன் நாங்கள் இப்போது உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராவதற்கான பணிகளையும் செய்கிறோம். பின்னர் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இது புதுச்சேரி நிர்வாகம், தீபாவளிப் பண்டிகை காலப் பணிகளை மேற்கொள்ளும் தருணம்.

புதுச்சேரி படிப்படியாக உள்ளாட்சித் தேர்தலுடன் சுயராஜ்ஜியத்தை நோக்கி நகர்கிறது.

மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி வரும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் அந்நிதி வரவில்லை.

உண்மையான சமூக சேவையாளர்களுக்கும், சமூகத்தில் மாற்றத்தைக் காண விரும்பும் ஆர்வலர்களுக்கும் இது சிறந்த வாய்ப்பு".

இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x