Published : 22 Oct 2020 12:06 PM
Last Updated : 22 Oct 2020 12:06 PM

ஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்களில் இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா?மத்திய சமூக நீதித்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

சென்னை

ஸ்டேட் வங்கி கிளார்க் பணித் தேர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினரை விட பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு கட் ஆஃப் மதிப்பெண் குறைவாக உள்ளது நேற்று பரபரப்பான செய்தியானது. வங்கித்தேர்வில் இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா என்பது குறித்து மார்க்சிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டுக்கு மார்க்சிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன் எழுதிய கடிதம்:

“நேற்று ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தொடக்க நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

சந்தேகம் எழுப்பும் கட் ஆஃப்

அதில் ஒவ்வொரு பொது மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில் பொதுப் பிரிவினருக்கான கட் ஆஃப் 62 எனவும், ஓபிசி, எஸ்.சி. பிரிவினருக்கும் அதே 62 மதிப்பெண்களே கட் ஆஃப் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.டி. பிரிவினர் கட் ஆஃப் 59.5 ஆகும். அதை விட பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோர் (EWS) கட் ஆஃப் குறைவாக அதாவது 57.75 ஆக உள்ளது. இக் கட் ஆஃப் விவரங்கள் சமுக யதார்த்தங்களோடு பொருந்துவதாக இல்லாததால் இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

எல்லோரின் கட் ஆஃப் விவரங்களும் தேர்வு பெற்றோர் பட்டியலோடு வெளியிடப்படாததால் இட ஒதுக்கீடு அமலாகிறதா என்பதற்கான சமூகத் தணிக்கைக்கான வாய்ப்பின்றி உள்ளது. தனியர்களுக்கே அவரவர் கட் ஆஃப் விவரங்கள் அனுப்பப்படுகின்றன.

எழும் கேள்விகள்

இந்தத் தேர்வுகள் ஐ.பி.பி.எஸ் (IBPS) என்ற அமைப்பின் வாயிலாக நடத்தப்பட்டு வங்கிகளுக்கு தேர்வு பெற்றோர் பட்டியல் வழங்கப்படுகிறது. அந்த அமைப்பும் ஆர்.டி.ஐ உள்ளிட்ட சமூகக் கண்காணிப்பிற்கு உட்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. அரசின் ஆணைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய எந்தவொரு அமைப்பும் இப்படி சமூகக் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதாக எப்படி இருக்க முடியும்?

இதோ விடை கோரும் கேள்விகள்

1) ஏன் தேர்வு பெற்றோர் பட்டியல் முழுமையாக ஒவ்வொரு தனியரின் கட் ஆஃப் மதிப்பெண்களோடும், அவர்கள் சார்ந்துள்ள பிரிவு விவரங்களோடும் பொதுவில் வெளியிடக்கூடாது?

2) பொதுப் பட்டியல் என்பது இட ஒதுக்கீட்டுப் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான்; அவர்கள் பொதுப் பட்டியல் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேலாகப் பெறும்போது பொதுப் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்ற நெறி கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா?

3) மேற்கூறிய கேள்விக்கான விடை 'ஆம்' எனில், எவ்வாறு பொது, ஓ.பி.சி., எஸ்.சி. பிரிவினர் கட் ஆஃப் ஒரே அளவில் உள்ளன?

4) தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் "பொதுப் பிரிவில்" எவ்வளவு ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., இ.டபிள்யூ.எஸ் பிரிவைச் சார்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்?

5) இட ஒதுக்கீட்டுப் பிரிவில் தேர்வு பெற்றவர்களின் கட் ஆஃப் எதில் தொடங்கி எதில் முடிவடைகிறது?

6) இ.டபிள்யூ.எஸ் பிரிவின் கட் ஆஃப், எஸ்.டி கட் ஆஃப் ஐ விடக் குறைவாக உள்ளது. எவ்வளவு இ.டபிள்யூ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர்வில் இடம் பெற்றனர்? எவ்வளவு பேர் தொடக்க நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்?

7) ஒவ்வோர் இட ஒதுக்கீடு பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவைச் சாராதவர்கள் தேர்வில் இடம் பெற்றனர்? எவ்வளவு பேர் துவக்க நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்? பிரிவு வாரியாக விவரங்கள் வேண்டும்.

8) இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலில் இடம் பெறும் இக் கேள்விகளுக்கெல்லாம் விடைகள் தேவைப்படுகின்றன. இட ஒதுக்கீடு அமலாக்கம் பற்றி வெளிப்படையான அணுகுமுறையும், சமூகத் தணிக்கையும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இது சம்பந்தமாக சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை, நிதித்துறை அமைச்சகத்தின் பதிலை எதிர்பார்க்கிறேன்”.

இவ்வாறு சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x