Last Updated : 22 Oct, 2020 11:30 AM

 

Published : 22 Oct 2020 11:30 AM
Last Updated : 22 Oct 2020 11:30 AM

சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பில் செல்போன்கள் திருட்டு சம்பவம்; கொட்டும் மழையில் நள்ளிரவில் ஐஜி ஆய்வு

செல்போன்கள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி கடத்தப்பட்ட இடத்தில், கோவை மேற்கு மண்டல ஐஜி பெரிய்யா, சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார், கிருஷ்ணகிரி எஸ்பி பண்டிகங்காதர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பில் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், மத்திய பிரதேச மாநிலம் அங்கித்ஜான்ஜா கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என எஸ்.பி. பண்டிகங்காதர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி எஸ்.பி. பண்டிகங்காதர் இன்று (அக். 22) கூறும்போது, "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை என்னுமிடத்தில் நேற்று (அக். 21) அதிகாலை 2 மணி முதல் 3 மணியளவில், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து, மகாராஷ்ரா மாநிலத்தில் உள்ள எக்ஸ்எஓஎம்ஐ (XAOMI) டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடட் என்னும் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு 15 பெட்டிகளில் (தலா 928) 13 ஆயிரத்து 920 எண்ணிக்கை கொண்ட செல்போன்கள் ஏற்றிக் கொண்டு லாரி புறப்பட்டது. இந்த செல்போன்கள், டிஹெச்எல் நிறுவனத்தின் பார்சல் சர்வீஸ் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த லாரியை கோவையை சேர்ந்த ஓட்டுநர் அருண்குமார் (34), மாற்று ஓட்டுநர் சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் (29) ஆகியோர் ஓட்டிச் சென்றனர்.

மேலுமலை என்னுமிடத்தில் சென்ற போது, 25 வயது முதல் 30 வயது மதிக்கத்தக்க 8 நபர்கள், 3 லாரியில் பின்தொடர்ந்து வந்து கண்டெய்னர் லாரியின் குறுக்கே நிறுத்தி, வழிமறித்து ஓட்டுநர்களை கையால் தாக்கி கட்டை மற்றும் கத்திமுனையில் மிரட்டி செல்போன்களுடன் லாரியை திருடிச்சென்றுள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அதே சாலையில் அலகுபாவி என்னும் இடத்தில் உள்ள ஹெச்பி பெட்ரோல் பங்க் அருகில் செல்போன்களை திருடிக் கொண்டு லாரியை அங்கே விட்டுச் சென்றுள்ளது நேற்று காலை 6 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

நிகழ்விடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வாகனத்தில் பதிவான ரேகைகள், பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதுதொடர்பாக சூளகிரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இக்குற்ற சம்பவத்தில் மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 'அங்கித்ஜான்ஜா' கொள்ளை கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என தெரியவந்துள்ளது" என்றார்.

கொட்டும் மழையில் ஆய்வு

செல்போன்கள் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக, நிகழ்விடத்தில் நேற்று நள்ளிரவில் கொட்டும் மழையில் கோவை மேற்கு மண்டல ஐஜி பெரிய்யா, சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் மற்றும் எஸ்.பி. பண்டிகங்காதர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அமைக்கப்பட்டுள்ள 8
தனிப்படை போலீஸாருக்கு அறிவுரைகளை வழங்கினார்கள். மேலும், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் கொள்ளை

கடந்த ஆகஸ்ட் மாதம், காஞ்சிபுரத்தில் இருந்து, ஆந்திர மாநிலத்திற்கு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல்போன்களை ஏற்றிச் சென்ற லாரியை, துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற மர்ம கும்பல், ரூ.7 கோடி மதிப்பிலான செல்போன்களை திருடிச் சென்றது. இந்த கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x