Published : 21 Oct 2020 07:18 PM
Last Updated : 21 Oct 2020 07:18 PM
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கு இடையே கட்சிக் கொடி ஏற்றுவதில் போட்டி ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் அதிமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் நேற்று திமுக சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றுவதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன் காவல் நிலையத்தில் அனுமதி கேட்கப்பட்டது. அவர்களுக்கு அனுமதி அளித்த போலீஸார், 200 பேர் மட்டுமே கூட வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மைக் அமைக்க அனுமதி கிடையாது.
கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருமே முகக்கவசம் அணிய வேண்டும். போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றுவதற்காக அதிமுகவினரும் அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், தடையை மீறி அதிமுகவினர் கொடி ஏற்றுவதற்கு தயாராக இருந்துள்ளனர்.
மேலும், பேருந்து நிலையம் முன்பு இரு கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது இரு கட்சியினருக்கும் சாலையோரத்தில் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஏடிஎஸ்பி கோபி தலைமையில், டிஎஸ்பிக்கள் சங்கர், கலைக்கதிரவன், பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் மற்றும் காவல் ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் விளாத்திகுளம் பேருந்து நிலையத்துக்கு முன் குவிக்கப்பட்டனர். அங்கிருந்த அதிமுகவினரை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
மாலை 5 மணிக்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் திமுக கொடி ஏற்றப்பட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
அப்போது விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் தலைமையிலான அதிமுகவினர் சூரங்குடி சாலையில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், டிஎஸ்பி கலைக்கதிரவனுக்கு கையில் சிறு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸார் சிறியளவில் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.
இதனால் போலீஸாருடன் எம்எல்ஏ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திமுகவினர் அப்பகுதியிலிருந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து அதிமுகவினர் சின்னப்பன் எம்எல்ஏ தலைமையில் பேருந்து நிலையம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏடிஎஸ்பி கோபி பேச்சுவார்த்தை நடத்தினார்.
தகவலறிந்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பேருந்து நிலையத்தின் முன்பு உள்ள அதிமுக கொடி கம்பத்தில் சின்னப்பன் எம்எல்ஏ கட்சி கொடி ஏற்றினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் மதியம் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை பதற்றம் நிலவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT