Published : 21 Oct 2020 06:41 PM
Last Updated : 21 Oct 2020 06:41 PM
திருநெல்வேலி மாநகரை வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தூய்மையாகப் பராமரிக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக கடைகளுக்கு முன் வண்ண குப்பைத் தொட்டிகள் மற்றும் அழகுச் செடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
திருநெல்வேலி மாநகரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது. குடியிருப்புகளில் இருந்து மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று பிரித்து வாங்கப்படுகிறது. மட்கும் குப்பைகளை நுண்உரமாக்கும் மையங்களுக்கு கொண்டு சென்று இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
இந்த உரம் மூலம் பல்வேறு வகையான காய்கறி, பழச்செடிகளும் வளர்க்கப்படுகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகரிலுள்ள கடைகளுக்குமுன் அழகுச் செடிகளையும், மட்கும் குப்பை, மட்காத குப்பைகளை பிரித்துப் போடுவதற்காக வண்ண குப்பை தொட்டிகளை வைக்கவும் மாநகர வியாபாரிகளை மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் வியாபாரிகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ்களும் கடந்த 2 மாதங்களுக்குமுன் வழங்கப்பட்டிருக்கின்றன. கடைகளில் உருவாகி வெளியேற்றப்படும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று தரம்பிரித்து கடைகளின்முன் வைக்கப்படும் பச்சை மற்றும் நீலவண்ண குப்பை தொட்டிகளில் பிரித்து போடுவதற்கு நுகர்வோருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலியின் மக்கள் அதிகம் புழங்கும் ஹைகிரவுண்டிலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைமுன் சாலையோர கடைகளுக்குமுன் அழகிய செடிகளும், பச்சை, நீல வண்ணங்களில் குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த குப்பை தொட்டிகளில் குப்பைகளை வாடிக்கையாளர்கள் போடுகிறார்கள். வெளியே வீசி எறிவதில்லை. இதனால் இந்த கடைகள் அமைந்துள்ள பகுதி தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு கடைக்காரர்களும் தங்கள் சொந்த செலவில் இந்த தொட்டிகளை வைத்து பராமரிக்கிறார்கள்.
இது தொடர்பாக இப்பகுதியில் கடை நடத்தும் எம். ஜாபர் கூறும்போது, வியாபாரிகள் நலச்சங்கத்தின் மூலம் ஒவ்வொரு கடைகளின்முன் குப்பை தொட்டிகளும், அழகு செடிகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. குப்பை தொட்டிகளில் குப்பைகளை போடுவது தொடர்பாக வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருக்கிறது. வாடிக்கையாளர்களும் ஒத்துழைக்கிறார்கள். இதனால் கடைகளுக்குமுன் குப்பைகள் வீசியெறியப்படுவதில்லை. சுத்தம், சுகாதாரம் பேணப்படுவது நன்றாகவே இருக்கிறது என்று தெரிவித்தார்.
ஹைகிரவுண்ட் சாலையில் முதற்கட்டமாக இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மாநகரின் அனைத்து பகுதிகளிலும் கடைகளுக்குமுன் குப்பை தொட்டிகள், அழகு செடிகளை வைத்து பராமரிக்கும் திட்டம் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment