Last Updated : 21 Oct, 2020 04:55 PM

 

Published : 21 Oct 2020 04:55 PM
Last Updated : 21 Oct 2020 04:55 PM

புதுச்சேரி மாநிலத்தில் புதிய முயற்சியாக காரைக்காலில் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு முகாம்; பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்ட புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் அகன்ஷா யாதவ்.

காரைக்கால்

புதுச்சேரி மாநிலத்தில் புதிய முயற்சியாக, காரைக்காலில் நான்கு நாட்கள் நடைபெறும் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.

காரைக்காலில் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் இன்று (அக். 21) நடைபெற்ற இந்தச் சிறப்பு முகாமை, கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையைக் கூடுதல் பொறுப்பாகக் கவனிக்கும் புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் அகன்ஷா யாதவ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா பேரிடர் சூழலால் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் புதுச்சேரியின் மற்ற பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புதுச்சேரிக்கு வந்து புகார்கள் அளிப்பதில் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

அதனால் முதல் முறையாக, புதிய முயற்சியாக காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு முகாம்கள் அமைத்து, ஏற்கெனவே உள்ள புகார் மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளவும், புதிய மனுக்களைப் பெறவும் திட்டமிடப்பட்டது.

இந்த முகாம் காரைக்காலில் முதலில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்து மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் தொடங்கப்படும். காரைக்காலில் 4 நாட்கள் முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களின் ஆதரவு மற்றும் சூழலைப் பொறுத்து மேலும் நீட்டிக்கப்படலாம்.

மக்கள் எவ்வித அச்சமுமின்றி இங்கு வந்து புகார் மற்றும் பிரச்சினைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம். ஏற்கெனவே இப்பகுதி சார்ந்த 20 புகார் மனுக்கள் வந்துள்ளன. அவை குறித்தும் விசாரிக்கப்படும்.

காரைக்காலில் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை கிளை அலுவலகம் நிரந்தரமாக அமைப்பது குறித்து நிர்வாக ரீதியாக முடிவெடுக்கப்படும்" என்றார்.

பொதுமக்கள் 9443427787, 0413- 2238016, 2238017 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார், தகவல்கள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x