Published : 21 Oct 2020 04:30 PM
Last Updated : 21 Oct 2020 04:30 PM
வத்தலகுண்டு அருகே விபத்தில் சிக்கியதால் மூளைச்சாவு அடைந்த கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் கிராமத்து பட்டதாரி பெண்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி கருப்பையா (35). இவரது மனைவி சத்யா பி.காம். பட்டதாரி. பால் வியாபாரத்திற்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது கருப்பையா விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
மதுரை தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் கருப்பையாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கவலையடைந்த மனைவி சத்யா, தனது கணவரின் உறவினர்களோடு கலந்து பேசி, கருப்பையாவின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முடிவு செய்தார்.
இதுகுறித்து கூறிய சத்யா, "எனது கணவர் உடலில் இருந்து இருதயம், கல்லீரல் உள்ளிட்ட ஏழு உறுப்புகளை ஏழு பேருக்கு தானம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எனது கணவர் இந்த உலகில் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என நம்புகிறேன் " என்று கண்ணீர்மல்க கூறினார்.
ஊர்மக்கள் அஞ்சலிக்குபின் கருப்பையாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கணவரின் வருமானத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்திவந்த கிராமத்து பட்டதாரி பெண் சத்யா தனது கணவரின் உடல் உறுப்புக்களை தானம் செய்தது, அனைவரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருந்தது.
சத்யாவின் வாழ்வாதாரத்தைக் காக்க அவருக்கு ஏதேனும் பணி வழங்க முன்வரவேண்டும் என அரசை ஊர் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT