Published : 21 Oct 2020 03:58 PM
Last Updated : 21 Oct 2020 03:58 PM

மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் ‘வாக்கிங்’ செல்வதற்கு கட்டணம் வசூல்: புதிய நடைமுறையால் பொதுமக்கள் அதிர்ச்சி

மதுரை

மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது வாக்கிங் செல்வதற்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு அரங்கமாக மதுரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் விளையாட்டு அரங்கம் உள்ளது. 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த மைதானம் கடந்த 1970 ஆண்டு தொடங்கப்பட்டது.

கடந்த 2004, 2012 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசு நிதி உதவியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தனி நபர் போட்டிகள், ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, இறகுப் பந்து போன்ற குழுப்போட்டிகள் அனைத்து வகை போட்டிகளும் இங்கு நடைபெற்று வருகிறது.

சுமார் 2 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் இந்த மைதானத்தில் அமர்ந்து விளையாட்டுப் போட்டிகளை காணும் அளவிற்கு மூன்று கேலரிகள் உ்ளளன. சிறுவர்கள், இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை இங்கு தினமும் விளையாடுவதற்கும், வாக்கிங் பயிற்சிக்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் வந்து செல்கிறார்கள்.

விளையாடுவதற்கு, உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. மைதானத்தில் வாக்கிங் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அன்றாட வாக்கிங் வருவோரிடம் கட்டணம் வசூலிக்கும் புதிய நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

அதனால், காலையில் ‘வாக்கிங்’ வரும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை மாவட்டம் பெயரில் 28 விளையாட்டுகளுக்கான விலைபட்டியல் பிரமாண்டமாக நுழைவு வாயிலில் வைத்துள்ளனர். ஏற்கெனவே சிறுவர்கள், இளைஞர்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் பயிற்சிக்கு சிறுவர்களுக்கு ரூ.236, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.354, பொது மக்களுக்கு ரூ.590 என்று மூன்றுவிதமாக பிரித்து கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

இது போல் அனைத்து விளையாட்டிற்கும் ஒவ்வொரு விதமாகக் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். தற்போது புதிதாக பொது மக்களுக்கு நடைபயிற்சி மேற்கொள்வதற்கு ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து மாதம் ரூ.59 வீதம் வருடத்திற்கு ரூ.708 என்று விலை நிர்ணயித்துள்ளனர். இதனால், சாதாரண நடைபயிற்சி செல்வதற்குமா? என்று பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலரான செ.கார்த்திக் கூறியதாவது;

விளையாட்டு மைதானத்திற்குள் நுழைவதற்கே கட்டணம் வசூல் செய்வதும், இல்லாவிட்டால் அனுமதி மறுப்பதும் தவறான போக்கு. மைதானம் அமைந்திருக்கும் பகுதிகளில் கரும்பாலை, கே.புதூர் உள்ளிட்ட நடுத்தர குடும்ப மக்கள் வசிக்கின்றனர். ஏராளமான இளைஞர்களுக்கு கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடுவதற்காக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடுவதற்கே கட்டணம் வசூலிப்பது தவறு என்று போராடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நேரத்தில், வாக்கிங் செல்வதற்கே கட்டணம் கேட்பதை ஜீரணிக்க முடியவில்லை. மாநகராட்சி ஈக்கோ பூங்காவில் வாக்கிங் வருவோரிடம் கட்டணம் வசூலிப்பதில்லையே.

ஏற்கெனவே பொதுமக்கள் இலவசமாக வாக்கிங் செல்வதற்கும், விளையாடுவதற்கும் சென்று வந்த மருத்துவக்கல்லூரி மைதானம் அங்குள்ள கூடுதல் கட்டிடத்திற்காக தாரைவார்க்கப்பட்டது.

மற்ற தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மைதானங்களில் விளையாடுவதற்கு ஏற்கெனவே இதுபோல் கட்டணம் நடைமுறை உள்ளது. அதனால், இந்த மைதானங்களில் நடுத்த, ஏழை மாணவர்கள் சென்று விளையாட முடியாமல் ஏமாற்றம் அடைந்ததால் அவர்கள் விளையாட்டு திறமை மழுங்கடிக்கப்பட்டநிலையில் தற்போது மக்கள் வாங்கிங் செல்லவும் முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஈக்கோ பார்க்கில் மதுரையைச் சேர்ந்த அனைத்து மக்களும் செல்ல முடியுமா? மக்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வாக்கிங் செல்வதற்கு இலவசமாக அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட விளையாட்டு துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘2018ம் ஆண்டு முதலே மாவட்ட விளையாட்டு அரங்குகளில் வாக்கிங் வருவோரிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. அது இதுவரை செயல்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது செயல்படுத்தி உள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x