Published : 21 Oct 2020 03:34 PM
Last Updated : 21 Oct 2020 03:34 PM
ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்குத் தடை விதிக்கக்கோரி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் ஆன்லைன் விளையாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. இலவச விளையாட்டுகள் தற்போது கட்டணமாகவும், பணம் வைத்து விளையாடும் சூதாட்டமாகவும் மாறி விட்டது. ஆன்லைனில் ரம்மி எனப்படும் சீட்டாட்ட மோகம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த விளையாட்டினால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. கடன் வாங்கி பணம் கட்டி விளையாடிய பலரும் பணத்தை இழந்து, கடனாளியாகி உள்ளனர்.
வில்லியனூர் கோர்க்காடு வியாபாரி ஒருவர், பல லட்சத்துக்கு மேல் இழந்து கடனாளியானார். விரக்தியடைந்த அவர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். 'ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்' என அவர் இறக்கும் முன்பு பேசிய ஆடியோவும் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று (அக். 21) கூறியதாவது:
"புளூவேல் (Bluewhale) என்ற உயிரை பறிக்கும் விளையாட்டை தடை செய்ய புதுவை அரசுதான் முதலில் வலியுறுத்தியது. அதன்படி, அந்த விளையாட்டு தடை செய்யப்பட்டது.
ஏற்கெனவே புதுவையில் ஆன்லைன் லாட்டரியை புதுவையில் தடை செய்துள்ளோம். . ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் பலரும் பணத்தை இழந்து வருகின்றனர். புதுவையில் ஒருவர் ரூ.40 லட்சம் ரூபாய் வரை ரம்மி விளையாட்டால் இழந்து, உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார்.
இவ்விளையாட்டு தடையானது மாநில அரசின் கீழ் வராது. அதனால், ஆன்லைன் விளையாட்டுகளை உடனடியாக மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என.மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
ரம்மி மட்டுமல்ல அனைத்து சூதாட்ட செயலிகளையும் தடை செய்ய வலியுறுத்தியுள்ளேன். ரம்மி விளையாட மக்களைத் தூண்டும் விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT