Published : 21 Oct 2020 01:56 PM
Last Updated : 21 Oct 2020 01:56 PM
மத்திய ரிசர்வ் காவல் படையின் தேர்வு மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட வேண்டுமென்ற எம்.பி., சு. வெங்கடேசனின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுத் தேவைப்பட்டால் கூடுதல் தேர்வு மையம் அமைக்கப்படுமென சிஆர்பிஎஃப் பொது இயக்குனரகம் பதில் அளித்துள்ளது.
சு.வெங்கடேசன் கோரிக்கை
“குரூப் "பி" மற்றும் குரூப் "சி" அமைச்சுப் பணி அல்லாத (Non ministerial), பதிவிதழில் இடம் பெறாத, மோதல் முனைகளில் பணிபுரிகிற 780 அகில இந்தியப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் டிசம்பர் 20 அன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நியமன அறிவிக்கையில் தேர்வு மையங்கள் 9 இடங்களில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவற்றில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தலா 1 இடமும் அமைந்துள்ளன. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம் கூட இல்லை.
இது தமிழக, புதுச்சேரி விண்ணப்பதாரர்களை மிகப் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கும்; குறிப்பாக இன்றைய கோவிட்-19 சூழல், மக்களின் நகர்வுகளுக்கு இருக்கிற பிரச்சினைகள் ஆகிய பின்புலத்தில் மேற்கண்ட பணிகளுக்கான போட்டியில் ஈடுபடுவதற்கான தடைகளாகவும் மாறுமென்று உள்துறை அமைச்சருக்கும், சிஆர்பிஎஃப் பொது இயக்குனருக்கும் கடந்த அக்.10 ஆம் தேதி அன்று சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதி குறைந்தபட்சம் ஒரு மையத்தை இவ்விரு பகுதிகளுக்கும் அறிவிக்குமாறு கோரியிருந்தார்.
சிஆர்பிஎஃப் பதில்
அக் கடிதத்திற்கு அக்.19 தேதியிட்ட பதிலில், சிஆர்பிஎஃப் டிஐஜி பி (ரெக்ரூட்மெண்ட்) மனோஜ் தியானி "முந்தைய பணி நியமனம் மற்றும் தற்போது எதிர்பார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில், தேர்வு மையங்கள் பகுதி வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2020- துணை மருத்துவப் பணி நியமனங்கள் தொடர்பாக வரப் பெற்றுள்ள விண்ணப்பங்களைப் பரிசீலித்து வருகிறோம். இப் பரிசீலனை முடிந்தவுடன் தேவைப்பட்டால் கூடுதல் தேர்வு மையங்கள் அறிவிக்கப்படுமென்பதைத் தெரிவிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சு.வெங்கடேசன் கருத்து
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், ''திறந்த மனதோடு கூடுதல் மையங்களுக்கான கோரிக்கை பரிசீலிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. தமிழகம், புதுவைக்குத் தேர்வு மையம் கிடைக்குமென்று நம்புகிறேன். அதை சிஆர்பிஎஃப் உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்ப நிலையிலேயே தேர்வு மையங்கள் அறிவிக்கப்படுவது, மையங்கள் இல்லாத பகுதிகளை சார்ந்தவர்களின் முனைப்பைப் பாதித்திருக்கக் கூடுமென்பதால் புதிய மையங்களை அறிவித்து விண்ணப்பத் தேதியையும் நீட்டிக்க வேண்டுமென்ற எனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். கோவிட் சூழலை மனதில் கொண்டு இக்கோரிக்கை ஏற்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
இதனை எம்.பி., சு.வெங்கடேசன் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...