Last Updated : 21 Oct, 2020 12:53 PM

1  

Published : 21 Oct 2020 12:53 PM
Last Updated : 21 Oct 2020 12:53 PM

விவசாயிகளை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார்: அமைச்சர் காமராஜ் விமர்சனம்

நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சர் காமராஜ்.

தஞ்சாவூர்

விவசாயிகளை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார் என, தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று (அக். 21) ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"கடந்த 21 நாட்களில் 65 லட்சம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை குறுவை சாகுபடியில் இல்லாத வரலாற்று நிகழ்வு இது.

நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளோம். இருந்தாலும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லின் ஈரப்பதம் கூடுதலாக இருந்தாலும் கொள்முதல் செய்து வருகிறோம்.

இதுவரை டெல்டா மாவட்டங்களில் 90 சதவீதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதி 10 சதவீதம் மட்டுமே உள்ளது. இனி வரும் காலங்களில் விவசாயிகள் எவ்வளவு நெல் கொண்டு வந்தாலும் அதைக் கொள்முதல் செய்வதற்குத் தமிழக அரசு தயாராக இருக்கிறது.

திமுக ஆட்சியில் இருந்தபோது ரூ.1,100 மட்டுமே குவிண்டாலுக்கு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ரூ.1,950 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார். விவசாயிகளின் வாழ்க்கை சேறு, சகதி, வறட்சி என அமைந்துள்ளது. நான்கு சுவருக்குள் அமர்ந்து கொண்டு, ட்விட்டரில் விவசாயிகளின் வாழ்க்கை அமைக்கப்படவில்லை. எனவே, விவசாயிகளின் நிலைமை, விவசாயிகளாக இருக்கக்கூடிய எங்களுக்குத் தெரியும். எனவே விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது".

இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x