Published : 21 Oct 2020 11:25 AM
Last Updated : 21 Oct 2020 11:25 AM
கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 48 அடியாக உயர்ந்ததால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை ஆட்சியர் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி அணையின் பிரதான முதல் மதகு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி உடைந்தது. இதனை அகற்றிவிட்டு தற்காலிக மதகு பொருத்தப்பட்டது. பின்னர், ரூ.3 கோடி மதிப்பில் புதிய மதகு கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொருத்தப்பட்டது. அப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மீதமுள்ள 7 மதகுகளும் பழுதாகி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 7 மதகுகளையும் மாற்ற முடிவு செய்யப்பட்டது. அணையில் இருந்த தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டு மதகுகள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. ரூ.19 கோடி மதிப்பில் புதிதாக 7 மதகுகள் பொருத்தப்பட்டன. இதையடுத்து, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் கிருஷ்ணகிரி அணையில் 52 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்கும் பணி தொடங்கியது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்புப்பகுதிகளில் பெய்த மழையால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 48 அடியாக உயர்ந்த நிலையில், அணையை கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
கர்நாடகா பகுதி மற்றும் ஓசூர், சூளகிரி பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் மொத்த நீர்மட்டமான 52 அடியில் 48 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 1666.29 மில்லியன் கனஅடியில் தற்போது, 1238.06 மில்லியன் கனஅடிக்கு தண்ணீர் உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
அணையில் நீர்மட்டம் 50 அடியை எட்டும் நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி எந்நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரை யோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் கூறினார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி பொறியாளர் சையத் ஜஹ்ருதீன், வட்டாட்சியர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
நீர்வரத்து சரிவு
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 400 கனஅடியாக சரிவடைந்துள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28அடி. தற்போதைய அணையின் நீர் மட்டம் 37.86 அடியாகஉள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT