Published : 20 Oct 2020 07:34 PM
Last Updated : 20 Oct 2020 07:34 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மாதங்களில் 45 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு; கஞ்சா விற்ற 85 பேர் கைது: மாவட்ட எஸ்.பி. தகவல்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 45 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் கொலை, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 29 பேரும், பாலியல் வன்முறை போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 7 பேரும், கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 7 பேரும், திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேரும் என மொத்தம் 45 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய 313 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம் 107-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம் 109-ன்படி திருட்டு, கன்னக்களவு மற்றும் கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடியவர்கள் 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வழக்கமாக சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடிய ரவுடிகள் 481 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம் 110-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் முன்னெச்சரிக்ககை நடவடிக்கையாக 837 பேர் மீது குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக மொத்தம் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதில் தொடர்புடைய 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 73 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.7,30,500 ஆகும். இந்த வழக்குகளில் பயன்படுத்திய 10 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் ஈடுபட்டுள்ள முக்கிய எதிரிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி, ஆடியோ மற்றும் வீடியோ வெளியிட்டு ஜாதி, மத மோதல்களை தூண்டுபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x