Published : 20 Oct 2020 06:07 PM
Last Updated : 20 Oct 2020 06:07 PM

டெல்டா பகுதியில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் கொள்முதல்: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

சென்னை

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்துவதற்கும், விவசாயிகளிடமிருந்து வரப்பெறும் புகார்களைக் களைவதற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மண்டல மேலாளர்களின் நிலையில் தலா இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுக் கொள்முதல் பணி கண்காணிக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''முதல்வர் உத்தரவின்படி. தமிழகத்தில் கடந்த அக்.01 முதல் தொடங்கியுள்ள குறுவை கொள்முதல் பருவத்தில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் மொத்தம் 842 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அக்.01 முதல் அக்.19 வரை 2,37,204 மெட்ரிக் டன் அதாவது 59,30,100 மூட்டை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்குரிய தொகை ரூ.460.62 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 46,951 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கடந்த காலங்களில் குறுவை கொள்முதல் பருவங்களில் 2009-ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 25,368 மெட்ரிக் டன் அதாவது 6,34,200 மூட்டைகளும், 2011-ம் ஆண்டு குறுவை கொள்முதல் பருவத்தில் இதே காலகட்டத்தில் 1,68,316 மெட்ரிக் டன் அதாவது 42,07,900 மூட்டைகளும் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

இந்த அளவையும் நடப்பு குறுவை கொள்முதல் பருவதத்தில் அக்.19 வரை செய்யப்பட்ட குறுவை நெல் கொள்முதலையும் ஒப்பிடும்போது தற்போதைய கொள்முதல் அளவான 2,37,204 மெட்ரிக் டன் என்பது வரலாற்றுச் சாதனையாகும். மேலும், தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தவிர, வேறு எங்கெல்லாம் நெல் அறுவடைப் பணி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் குறுவைப் பருவக் கொள்முதலுக்குத் தேவைப்படும் சாக்குகள் மற்றும் சணல் ஆகியவை போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் அனைத்து மண்டலங்களிலும் சேர்த்து ஒரு கோடியே 5 லட்சம் சாக்குகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த சாக்குகளைக் கொண்டு 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இயலும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் மழையினால் விவசாயிகளிடமிருந்து வணிகர்கள் யாரும் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்ய முன்வராத நிலையிலும் கொள்முதல் விலை அக். 01 முதல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 53/-வீதம் உயர்த்தப்பட்டு, தற்போது குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரக நெல்லுக்கு ரூ. 1958/-ம், பொது ரக நெல்லுக்கு ரூ. 1918/-ம் வழங்கப்படுவதாலும், கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கான தொகை உடனுக்குடன் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுவதாலும், அனைத்து விவசாயிகளும் தங்களது நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனை செய்யக் கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் இந்திய அரசு நிர்ணயித்துள்ள 17% ஈரப்பதத்தை விட கூடுதலாக இருந்தபோதிலும் விவசாயிகளின் நலன் கருதி, அதிக ஈரப்பதத்துடன் கூடிய நெல் மூட்டைகளும் முழுமையாக கொள்முதல் செய்யப்பட்டு நேரடியாக அரவைக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், 22% வரை ஈரப்பதத்துடன் கூடிய நெல்லினையும் கொள்முதல் செய்வதற்கு ஆணை பிறப்பிக்க கோரி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு, மத்திய குழுவினர் ஓரிரு நாட்களில் டெல்டா மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்துவதற்கும், விவசாயிகளிடமிருந்து வரப்பெறும் புகார்களைக் களைவதற்கும், கொள்முதல் செய்து இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு உடனுக்குடன் இயக்கம் செய்வதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மண்டல மேலாளர்களின் நிலையில் தலா இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு கொள்முதல் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2019-2020 கொள்முதல் பருவத்தில் முதல்வரின் உத்தரவுப்படி மொத்தம் 2,135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத் தொகை ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6,130 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் 5,85,241 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்தக் கொள்முதல் அளவானது தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாகும்''.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x