Published : 20 Oct 2020 05:24 PM
Last Updated : 20 Oct 2020 05:24 PM
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தத் தயங்க மாட்டோம் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;
"காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் தொடர்ந்து குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட சம்பா நெல் மூட்டைகள் தற்காலிகக் கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் தற்போது குறுவையில் கொள்முதல் செய்யக்கூடிய நெல் மூட்டைகளை அந்தந்தக் கொள்முதல் மையங்களிலேயே அடுக்கி வைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லைக் கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள்.
அறுவடை செய்த நெல்லை வீதிகளில் கொட்டி வைத்து மழை நீரில் அவை அடித்துச் செல்வதைப் பார்த்துக் கண்கலங்கி மனமுடைந்து நிற்கின்றனர் விவசாயிகள். 'இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். உயர்மட்டக் குழுவை அனுப்பி வையுங்கள்' என்று வலியுறுத்தியும் இதுவரையிலும் தமிழக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த காலங்களில் நெல்லை எடுத்துச் செல்ல 51 லாரி ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் இருந்தது. தற்போது அதை மாற்றி ஒரே நிறுவனத்துக்கு அனுமதி அளித்திருப்பது தனிநபர் ஆதிக்கத்துக்கே வழிவகுக்கும். அந்த ஒப்பந்ததாரர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ, கண்காணிப்பதற்கோ மாவட்ட அதிகாரிகளுக்கு வாய்ப்பில்லாத நிலையில் லாரிகள் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வதில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து, முளைத்து, வீணாகக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, உயர் அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு உடனடியாக அனுப்பி வைத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அரசின் விவசாய விரோதச் சட்டங்களால் தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு நெல் கொள்முதல் செய்வதைக் கைவிடக்கூடிய நிலை ஏற்படும். இதனால் தமிழகத்தில் 2021-ம் ஆண்டு போராட்ட ஆண்டாகவும், தமிழகம் போராட்டக் களமாகவும் மாறும் நிலை உருவாகியுள்ளது. டிசம்பர் முதல் தேதி தொடங்க இருக்கும் கோட்டையை நோக்கிய பிரச்சாரப் பயணத்துக்காகத் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று விவசாயிகளைப் பிரச்சினைகளின் அடிப்படையில் ஒன்றுபடுத்த முயற்சி மேற்கொள்வோம்.
சமீபகாலமாக விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்துப் போராடக்கூடிய அரசியல் கட்சிகள் பலவும், விவசாய அமைப்புகளைப் புறந்தள்ளிவிட்டு அரசியல் கூட்டணி என்கிற பார்வையோடு போராட்டங்களை நடத்துகின்றன. அதனால் போராட்டங்களின் நோக்கங்கள் திசை திருப்பப்படுகின்றன. எனவே, இதிலிருந்து விவசாயிகளை அரசியல் பார்வையோடு ஒன்றுபடுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகளை ஒன்றிணைத்து வருகிற சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி எங்களுடைய பிரச்சாரப் பயணத்தை விவசாய விரோதச் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயத்துக்கான கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒருமித்த கருத்தை உருவாக்கும் நோக்கோடும் நடத்த இருக்கிறோம். தேவைப்பட்டால் அனைத்துத் தொகுதிகளிலும் விவசாயிகளை ஒன்றிணைத்து விவசாய மக்களை ஒன்றுபடுத்தி தேர்தல் களத்தில் வேட்பாளரை நிறுத்தவும் தயங்க மாட்டோம் என நாங்கள் எச்சரிக்கிறோம்".
இவ்வாறு பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT