Published : 20 Oct 2020 03:13 PM
Last Updated : 20 Oct 2020 03:13 PM

கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி 

சென்னை

7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காததால் கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து ஆளுநரிடம் கூறினோம். விரைவில் உரிய முடிவு எடுப்பதாக ஆளுநர் கூறினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கவேண்டுமென தமிழக அரசு முடிவு செய்து சட்டப்பேரவையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் வந்தபோது நீட் தேர்வு முடிவு வந்துள்ள நிலையில், ஒப்புதல் வழங்கக் கோரி ஆளுநரை நிர்பந்திக்க முடியாது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரையில் மருத்துவக் கவுன்சிலிங் இல்லை என தமிழக அரசு தெரிவித்தது.

ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மருத்துவக் கவுன்சிலிங் தேதியும் அறிவிக்க முடியாமல் தள்ளிப்போவதால் இன்று 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு ஆளுநரைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தது.

ஆளுநரைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

“அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவர்களாக உருவாகிட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில், 7.5% உள் ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே சாத்தியம் என்கிற எண்ணத்தில் முதல்வர் முயற்சியால் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

அது சட்டமாக்கப்படும்போது அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக முடியும். எனவே, அதற்கு ஒப்புதல் கோரி அமைச்சர்கள் 5 பேர் இன்று ஆளுநரைச் சந்தித்து தமிழ்நாட்டில் நிலவுகின்ற சூழலைத் தெரிவித்தோம்.

குறிப்பாக கிராமப்புற, நகர்ப்புறத்தில் படிக்கின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினால்தான் அவர்கள் மருத்துவர்களாக முடியும். தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு அடையாளம், அங்கீகாரம் அளிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் இன்றுள்ள நிலையில் கவுன்சிலிங் உள்ள நிலையில் விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம்.

நாங்கள் கூறியதைப் பொறுமையுடன் கேட்ட ஆளுநர், விரைந்து முடிவெடுக்கிறேன். என்னுடைய பரிசீலனையில் உள்ளது. விரைவில் அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்தார். அவர் அதில் திருத்தங்கள் எதையும் சொல்லவில்லை. முதல்வர் கோரிக்கையைத் தெரிவித்த பிறகு உடனடியாக விரைவில் முடிவெடுக்கிறேன் என்று ஆளுநர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கவுன்சிலிங் நடக்காததையும், நீங்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே கவுன்சிலிங் நடக்கும் என்பதையும் ஆளுநரிடம் கூறிவிட்டோம். அவர் கட்டாயம் பரிசீலிக்கிறேன் என்று கூறினார்”.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x