Published : 20 Oct 2020 03:40 PM
Last Updated : 20 Oct 2020 03:40 PM

குற்றச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண்: குமரி காவல்துறை ஏற்பாடு

நாகர்கோவில்

குற்றச் சம்பவங்கள் நிகழும்போது அதை உடனடியாகக் காவல் துறைக்குத் தெரிவிக்கவும் அதுதொடர்பாகக் காவல் துறையினர் துரித நடவடிக்கை எடுக்கவும் வசதியாக பிரத்யேக வாட்ஸ் அப் எண்ணை கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

குற்றச் சம்பவங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் காவல்துறைக்குப் புகார் கொடுக்க வசதியாக 7010363173 என்ற வாட்ஸ்அப் எண்ணை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று அறிமுகப்படுத்தினார். இந்த சேவையைத் தொடங்கி வைத்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் சட்டம் - ஒழுங்கு, திருட்டு, பாலியல் குற்றங்கள், போதைப் பொருட்கள் விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 20 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றவாளிகள், சந்தேக நபர்கள், பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் என 590 பேர் மீது நன்னடத்தை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 242 நபர்களுக்கு நன்னடத்தை பிணை வழங்கப்பட்டு அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிணையை மீறி குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பிணைக்காலம் முடியும் வரை சிறையில் இருக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 3 மாதங்களில் 31 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 64 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட 93 பேர் மீது 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 38 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் கடந்த 3 மாதங்களில் 32 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேவின் பெயரில் போலியாக ஐடி உருவாக்கி மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

குற்றச் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணுக்கு வரும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x