Published : 20 Oct 2020 01:53 PM
Last Updated : 20 Oct 2020 01:53 PM

7.5% உள் ஒதுக்கீடு; ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

சென்னை

7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்துவது முறையல்ல. உடனடியாக ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டுத் தேர்வில் வகைப்படுத்துவது என்பது சம நீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சுமார் 300 இடங்கள் கிடைக்கும்.

நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்குக் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு காத்திருக்கிறது. இந்நிலையில் நீதிமன்றத்தில் இவ்வழக்கு வந்தபோது ஆளுநரை நிர்பந்திக்க, உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் ஆளுநர் அனுமதி குறித்து அரசுத் தரப்பு காத்திருந்தது. ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் கலந்தாய்வு தடைப்படுவதால் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தும் விதமாக ஆளுநரைச் சந்திக்க தமிழக அரசின் சார்பில் 5 அமைச்சர்கள் ஆளுநரைச் சந்திக்க இன்று காலையில் ராஜ்பவனுக்குச் சென்றனர்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது ஆளுநரைச் சந்தித்துப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கவேண்டுமென தமிழக அரசு முடிவு செய்து சட்டப்பேரவையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து இன்று அமைச்சர்கள் குழு ஒன்றும் ஆளுநரைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

இவற்றிற்குப் பின்னும் சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அரசின் முடிவாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு எடுக்கப்பட்ட ஒரு முடிவை நிறைவேற்ற அனுமதி வழங்காமல் மாநில ஆளுநர் காலம் தாழ்த்துவது முறையல்ல. உடனடியாக ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x