Published : 20 Oct 2020 01:05 PM
Last Updated : 20 Oct 2020 01:05 PM

ஆசனூரில் பழங்குடியின மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து வனப்பகுதியில் பிசில் மாரியம்மன் சிலை மீண்டும் பிரதிஷ்டை

ஈரோடு

பழங்குடி மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வனத்துறை அப்புறப்படுத்திய பிசில் மாரியம்மன் சிலை மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் -அரேப்பாளையம் சாலை வனப்பகுதிக்குள் பழங்குடி மக்கள் வழிபடும் பிசில் மாரியம்மன் கோயில் உள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பிசில் மாரியம்மனை குலதெய்வமாக வணங்கி வந்தனர். எவ்வித கட்டுமானமும் இல்லாமல் பாரம்பரிய கோயிலாக விளங்கி வந்த நிலையில், இங்கு சுவாமி கும்பிட வருபவர்கள், வனவிலங்குகளால் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பிசில்மாரியம்மன் சிலையை வனத்துறையினர் அகற்றினர்.

இதற்கு பழங்குடி கிராம மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. கோபி ஆர்.டி.ஓ. உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், மீண்டும் சுவாமி சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதில் பழங்குடியின மக்கள் உறுதியாக இருந்தனர். அகற்றப்பட்ட சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்யாவிட்டால், அதே இடத்தில் வழிபாடு செய்து போராட்டம் நடத்தப்படும் என பழங்குடி மக்கள் சங்கம் அறிவித்தது.

இந்நிலையில், பழங்குடிமக்களின் கோரிக்கையை ஏற்று அதே இடத்தில் பிசில் மாரியம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய அரசு அனுமதி அளித்தது. பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி, நேற்று முன்தினம் இரவு பூஜை நடத்தினர்.

இன்று காலை வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு, அதே இடத்தில் பிசில் மாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், தலைமை வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் நிகார் ரஞ்சன், மாவட்ட வன அலுவலர் அருண்லால், வட்டாட்சியர் ஜெகதீசன், ஆசனூர் ஊராட்சித் தலைவர் சித்ரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x