Published : 20 Oct 2020 12:22 PM
Last Updated : 20 Oct 2020 12:22 PM

ஊரடங்கு விதிமீறலுக்கு அபராதம்; ஆளுநர் உத்தரவு இல்லாமல் அமலாகும் அரசாணை: உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சென்னை

ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் நிலையில் விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை அமலில் உள்ளது. ஆளுநர் உத்தரவு இல்லாமல் அரசாணை அமலானதால் அதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கரோனா தொற்று அதிகரித்த நிலையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பேரிடர் மேலாண்மைச் சட்டமும் அமல்படுத்தப்பட்டது. ஊரடங்குச் சட்டமும் அமலில் உள்ளது. ஊரடங்கு தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு ஆகஸ்டு, செப்டம்பர் முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கரோனா பரவல் கட்டுப்படுத்தப்படாத நிலையில், அரசு அறிவித்துள்ள தளர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக, கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்து, அதைக் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது.

சுகாதாரத் துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பின்படி, தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொது இடத்தில் முகக்கவசம் அணியாதது, தனி மனித இடைவெளியைப் பின்பற்றாதது, பொதுவெளியில் எச்சில் துப்புதல், முடி திருத்தகம், ஸ்பா, ஜிம் ஆகியவற்றிற்கான நிலையான செயல்பாட்டு விதிகளைப் பின்பற்றாதது குற்றம் என்றும், அதற்காக 200 ரூபாயில் தொடங்கி 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க புதிய அறிவிப்பு வகை செய்கிறது.

1939 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை, சுகாதாரத் துறை ஆகியோருக்கு அதிகாரம் இல்லாததால், அவர்களுக்கு அதிகாரம் அளித்து அந்தச் சட்டத்தில் திருத்தமும் (பிரிவு 76(2)) கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த 77 வயதான ஆர்.முத்துக்கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “விதிகளைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவில், தனிநபர் விதிகளைப் பின்பற்றாவிட்டால் அது குற்றம் எனச் சேர்க்கப்பட்டுள்ளது. சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை ஆளுநர் அறிவிக்காமல் சுகாதாரத் துறைச் செயலாளர் அளவிலான நிர்வாக உத்தரவாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அபராதம் வசூலிக்க வகை செய்யும் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்” என முத்துக்கிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு அக்டோபர் 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x