Published : 20 Oct 2020 07:24 AM
Last Updated : 20 Oct 2020 07:24 AM
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் சிட்டி யூனியன் வங்கி முன்னாள் சேர்மன் வி.நாராயணன் நினைவு 15-வது சொற்பொழிவு நிகழ்ச்சி காணொலி மூலம் நேற்று நடைபெற்றது.
நிகழ்வில், சாஸ்த்ரா துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்பிரமணியன் வரவேற்று, சிட்டி யூனியன் வங்கியின் மிக நீண்டகால தலைவராக இருந்த வி.நாராயணன் மேற்கொண்ட வங்கி வளர்ச்சிப் பணிகளை நினைவு கூர்ந்தார்.
நிகழ்வில், ‘உலக பொருளாதார வரலாறு மற்றும் இந்தியாவின் எதிர்காலம்' என்ற தலைப்பில், மத்திய நிதி அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் பேசியபோது, ‘‘இந்திய கோயில்கள் வழிபாடு மற்றும் கலாச்சாரத்தின் இருப்பிடமாக மட்டுமின்றி, வங்கிகளுக்கு நிதி மூலதனத்தையும் வழங்கின. இந்த மூலதனத்தைக் கொண்டு வங்கிகள் ஆரம்ப நூற்றாண்டுகளின் கார்ப்பரேட் கில்டுகளுக்கு நிதியுதவி அளித்தன’’ என்றார்.
மேலும், மங்கோலியர்கள் மற்றும் சீனர்கள் ஆதிக்கம் செலுத்திய கடல் வர்த்தகம், பொருளாதார வழிகள் மற்றும் நாகப்பட்டினம் கடற்கரையில் ராஜேந்திர சோழ சாம்ராஜ்யத்தின் பங்கு ஆகியவை குறித்தும் பேசினார். குறிப்பிடத்தக்க மத மற்றும் பொருளாதார தலைநகரங்களாக விளங்கிய சோழர் கோயில்கள் மற்றும் பூரி ஜெகந்நாதர் கோயிலை மேற்கோள் காட்டிய அவர், பொருளாதாரத்தின் வரலாறு கணிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்தது என்றும், சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுத்தவர்கள் மட்டுமே தலைவர்களாக வெளிப்பட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பண்ணை மசோதா, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் சில நிதிக் கொள்கைகளில் இந்தியாவின் கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளின் தாக்கம் குறித்து பேசிய அவர், கரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியிருப்பதையும் முன்னிலைப்படுத்தினார். நிறைவாக, சிட்டி யூனியன் வங்கியின்நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.காமகோடி நன்றி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT