Published : 19 Oct 2020 06:25 PM
Last Updated : 19 Oct 2020 06:25 PM
முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் சேதுபதி நேரில் சந்தித்தார். அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர் 13-ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் காலமானார். உடனடியாக சொந்த ஊர் சென்ற முதல்வர் பழனிசாமி தாயார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தாயார் மறைவுக்குப் பின் முதல்வர் பழனிசாமி சென்னை திரும்பவில்லை. அதிமுக ஆண்டு விழாவைக் கூட சேலத்தில் கொண்டாடினார். இந்நிலையில் நேற்றிரவு முதல்வர் பழனிசாமி சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவரை திமுக தலைவர் ஸ்டாலின் அவரது இல்லத்துக்கு வந்து இன்று சந்தித்தார்.
அதேபோன்று சீமான், திருநாவுக்கரசர், டி.ராஜேந்தர், சைதை துரைசாமி, திரையுலகத்தினர், சின்னதிரையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதற்காக முதல்வர் பழனிசாமி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறார்.
இந்நிலையில் இன்று நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் இல்லத்துக்கு திடீரென வந்தார். அவரை அமைச்சர் கடம்பூர் ராஜு வரவேற்றார். பின்னர் முதல்வர் பழனிசாமியை விஜய் சேதுபதி வணங்கினார். முதல்வரின் தாயார் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் முதல்வரிடம் 2 நிமிடம் அமர்ந்து பேசி துக்கம் விசாரித்து தனது ஆறுதலைத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT