Published : 19 Oct 2020 01:53 PM
Last Updated : 19 Oct 2020 01:53 PM
ஒரு நாளைக்கு 1000 மூட்டைகளுக்கு குறையாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்று கொள்முதல் நிலையங்களுக்கு அரசு நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், 300 முதல் 700 மூட்டைகள் மட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகின்றது. அறுவடையாகும் நெல்லைக் கொள்முதல் நிலையங்களில் தாமதமில்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். அப்படிக் கொள்முதல் நடைபெறவில்லை. ஒரு நாளைக்கு 1000 மூட்டைகளுக்குக் குறையாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்று கொள்முதல் நிலையங்களுக்கு அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால், 300 முதல் 700 மூட்டைகள் மட்டும் கொள்முதல் செய்யப்படுகின்றது. கொள்முதல் செய்யப்படும் நெல்லைச் சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லாததால் அதிகமாகக் கொள்முதல் செய்ய முடியவில்லையென்று கொள்முதல் பணியாளர்கள் கூறுகின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் இதே கருத்தைக் கூறி விவசாயிகள் பழிவாங்கப்படுகின்றார்கள்.
கொள்முதல் செய்யப்படும் நெல்லைச் சேமித்து வைக்க போதிய வசதியை தமிழ்நாடு அரசு ஏன் இதுவரை செய்யவில்லை. இந்நிலை அரசின் கையாலாகாத பொறுப்பின்மையைக் காட்டுகின்றது என்று சுட்டிக்காட்டுகின்றோம். கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காகக் கொண்டு வரும் நெல்லை 20 நாட்களுக்கு மேல் சாலை ஓரத்தில் கொட்டிக் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது.
தொடர் மழையின் காரணமாக அந்த நெல் ஊறி ஈரப்பதம் அதிகரிப்பதுடன் முளைத்தும் விடுகிறது. அதன் விளைவாக 17 சத ஈரப்பதத்துக்குக் குறைவாக காய வைத்துக் கொண்டு வரப்படும் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து விடுகின்றது.
இதனாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றார்கள். ஆகவே 22 சதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வரப்படும் நெல்லை அன்றாடம் கொள்முதல் செய்யும் வகையில் அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால வேகத்தில் எடுத்திட வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்”.
இவ்வாறு துரைமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT