Published : 19 Oct 2020 01:17 PM
Last Updated : 19 Oct 2020 01:17 PM
பாமக திமுக, அதிமுகவுடன் கூட்டணி குறித்துப் பேசிவருகிறதா? விடுதலைச் சிறுத்தைகள் உள்ள கூட்டணியில் பாமக இடம்பெறுமா? கூட்டணியின் ஒரு நிபந்தனையாக அன்புமணிக்குத் துணை முதல்வர் கோரிக்கை வைக்கப்படுகிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு பாமக அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவர், பேராசிரியர் தீரன் பதிலளித்துள்ளார்.
பாமக அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் தீரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
''பாமகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு தொகுதியிலும் அன்புமணி ராமதாஸ் தம்பிகள் படை, தங்கைகள் படை, பாட்டாளிகள் படை எனத் தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகிறோம். 60 தொகுதிகளில் முதல் கவனமும், இரண்டாவதாக 30 தொகுதிகளிலும், 3-ம் கட்டத்தில் 144 தொகுதிகள் என 234 தொகுதிகளிலும் பாமகவைச் சிறப்பாக கட்டியமைத்து வருகிறோம்.
அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது 29 மாநிலம், 7 யூனியன் பிரதேசங்கள் என ஆட்சி செய்த அவரால், இந்த தமிழகத்தின் முதல்வராக வரக்கூட ஏராளமான தகுதிகள் உள்ளன. அந்த இலக்கை நோக்கித்தான் பாமகவைக் கட்டமைத்து வருகிறோம். வருங்காலத்தில் அதற்கான சூழ்நிலை உருவாகும் என்று நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம். அப்படி இருக்கும்போது அவருக்கு ஆட்சியில் துணை முதல்வர் பதவி கேட்பதில் தவறொன்றுமில்லை.
இதற்காக கட்சிகளில் கூட்டணி அமைக்கும்போது ஒப்பந்தமாக வலியுறுத்துவது குறித்து எங்களுடைய செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிப்போம். முடிவின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை. பொதுவாக தொண்டர்கள், பாமகவினர் அல்லது எங்களைப் போன்ற கட்சியினர் விரும்புவது என்னவென்றால் இந்தக் கூட்டணி வெறும் தேர்தலுக்கான கூட்டணி என்றில்லாமல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது போன்று தொடரவேண்டும் என்பதுதான். எங்கள் தொண்டர்களின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கிறது.
பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் பங்குபெறுவது குறித்து ஏற்கெனவே சொல்லிவிட்டோம். ஆதிதிராவிட மக்களைப் பொறுத்தவரை எங்களுக்கு எந்தவிதமான மனமாச்சர்யமும் கிடையாது.
திமுக, அதிமுக கூட்டணியில் பாமக மாறி மாறிப் போகிறது என்கிற கருத்து வைக்கப்படுகிறது. பொதுவாக வன்னிய சமுதாய மக்கள் பாமகவை அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதன் மூலம் சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெறவேண்டும் என விரும்புகின்றனர். அந்த நேரத்தில் வன்னிய சமுதாய மக்கள் ராமதாஸ் சொல்வதை முழுவதுமாக ஏற்று பாமக இருக்கும் அணியை ஆதரிக்கிறார்கள்.
அவ்வாறு 90 தொகுதிகளில் பாமக கூட்டணியில் இருக்கும்போது வெற்றி பெறுவது நிச்சயமாகிறது. இதனால் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணியில் பாமக இருப்பதை விரும்புகின்றனர். ஆனால் பாமகவைப் பொறுத்தவரை வன்னிய சமுதாய மக்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல கோரிக்கைகள் உள்ளன. அதன் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம்''.
இவ்வாறு தீரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT