Last Updated : 19 Oct, 2020 12:13 PM

1  

Published : 19 Oct 2020 12:13 PM
Last Updated : 19 Oct 2020 12:13 PM

பறவைகள் சரணாலயமாக விளங்கும் நஞ்சராயன் குளத்தில் தேனீக்களுக்காக மலர் வனம் அமைக்க திட்டம்

திருப்பூர்

திருப்பூரில் பறவைகள் சரணாலயமாக விளங்கும் நஞ்சராயன் குளத்தின் ஒரு பகுதியில் தேனீக்கள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளுக்காக மலர் வனம் அமைக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

திருப்பூரில் நல்லாறு மற்றும் நொய்யலாறு சார்ந்த நீர்நிலையான நஞ்சராயன் குளத்தை தேர்வுசெய்து சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து அரசு அனுமதியுடன் சீரமைப்புப் பணிகளை திருப்பூர் குளங்கள் பாதுகாப்பு அமைப்பு செய்து வருகிறது.

நஞ்சராயன் குளம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகளின் சரணாலயமாக திகழ்கின்றது. குளத்தில் நிறைந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டமிட்டுள்ள தன்னார்வலர் குழுவினர், மேற்கு கரையில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவுக்கு சுத்தம் செய்துள்ளனர். அவற்றில் 3.5 ஏக்கர் பரப்பளவுக்கு நாவல், இலுப்பை, பாதாம், பலா, சீனிப்புளி,அத்தி, சர்க்கரைப் பழம் உள்ளிட்ட வேகமாக வளரும் மரக்கன்றுகளை நடவு செய்து, நாள்தோறும் பராமரித்து வருகின்றனர். இதே இடத்தில் தேனீக்கள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளுக்கான மலர் வனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜூ மாரியப்பன்.

இதுதொடர்பாக அவர் கூறிய தாவது:

நஞ்சராயன் குளத்துக்கு வந்துள்ள பறவைகள், உணவு தேடிவிட்டு மீண்டும் வந்து சீமைக்கருவேல மரங்களில்தான் தங்குகின்றன. வளர்க்கப்பட்டு வரும் பழ மரங்களில் குறிப்பிட்ட வகை பழ மரங்கள் காய்க்கத் தொடங்கியுள்ளதால், கொஞ்சம்கொஞ்சமாக சிறு குருவிகள், குயில் போன்ற பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. அனைத்து மரங்களும் காய்க்கத் தொடங்கும்போது அனைத்து பறவைகளும் வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதுள்ள சூழலில்மரங்களை பாதுகாத்து வளர்ப்பதே சவாலான விஷயம். பக்கவாட்டு வேலி இல்லாததால், நன்கு செழித்து வளரும் மரங்களைக்கூடகால்நடைகள் சேதப்படுத்துகின்றன.

நிதிப் பற்றாக்குறையால் வேலி அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தேவையான நிதியை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகளுக்காக மலர்கள் நிறைந்த உயிர்வெளியை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வேளாண் விஞ்ஞானிகள், வன ஆர்வலர்கள், பூச்சியியல் வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x