Published : 19 Oct 2020 12:08 PM
Last Updated : 19 Oct 2020 12:08 PM
கருக்குழாயில் கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு கரோனா பாதித்த நிலையில், கருவை அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி மூலமாகவோ கலைத்து, இ.எஸ்.ஐ., மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளனர்.
நாற்பது வயதில் கருத்தரிப்பதே அபூர்வமானதாக உள்ள நிலையில், கோவையை சேர்ந்த 40 வயதான பெண் 3-வது முறையாக கருத்தரித்தார். முதல் 2 கருவும் கருச்சிதைவு ஏற்பட்டிருந்த நிலையில், 3-வது முறையாக கருத்தரித்த பெண்ணுக்கு அடிவயிற்றில் லேசான வலி ஏற்பட்டது இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில், கருப்பையில் கரு உண்டாவதற்கு பதிலாக கருக்குழாயில் கரு உண்டாகியிருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலமாக கருவை நீக்க முடிவு செய்து கரோனா பரிசோதனை செய்துள்ளனர். தொற்று இருப்பது உறுதியான நிலையில், அறுவை சிகிச்சை செய்வது ஆபத்து என்று தனியார் மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டதாலும், அதற்கு அதிகமான தொகை செலவாகும் என்பதாலும் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பெண்ணின் குடும்பத்தினர் அனுமதித்தனர்.
அங்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள், கருக்குழாயில் இருக்கும் கரு 11 மி.மீ. அளவு இருப்பதையும், 5 வாரங்கள் வளர்ச்சி உடைய கருவாக இருந்ததாலும், அறுவை சிகிச்சையின்றி மருத்துவ முறையில் ஊசி மூலமாகவே கலைக்க செய்ய முடிவு செய்தனர். ஊசி மூலம் ‘மீத்தோ டிரக்சேட்', ‘போலினிக் ஆசிட்' மருந்து செலுத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. கருவின் அளவு படிப்படியாக குறைந்து, கருவின் வளர்ச்சி குறைந்திருந்தததால் அந்தப் பெண் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இதுதொடர்பாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா கூறும்போது, "பொதுவாக கருக்குழாயில் கரு உண்டாகியிருந்தால், அதை உரிய காலத்தில் கண்டறிய வேண்டும். இல்லாவிட்டால், அது வெடித்து அதிக அளவில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இதனால் அறுவை சிகிச்சை செய்து உயிரை காக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், இந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டால், மீண்டும் கரு தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதாலும், மீண்டும் கருக்குழாயிலேயே கரு உண்டாவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் கருதி, அதிக சிரமம் எடுத்து அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment