Published : 19 Oct 2020 07:30 AM
Last Updated : 19 Oct 2020 07:30 AM

தஞ்சாவூரில் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தபோது மழைநீரில் அடித்து செல்லப்பட்ட நெல்மணிகள்: மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த கோரிக்கை

தஞ்சாவூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை கொள்முதல் நிலையத்தில் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு, சாலை முழுவதும் சிதறி கிடக்கும் நெல்மணிகள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழைநீரில் கணபதி அக்ரஹாரம், வண்ணாரப்பேட்டை நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், விற்பனைக்காக விவசாயிகள் சாலைகளில் கொட்டி வைத்திருந்த நெல்மணிகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், சாலை முழுவதும் நெல்மணிகள் சிதறிக்கிடந்தன.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது:

நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து, சாகுபடி செய்தும் பயனில்லை. நேரடி கொள்முதல் நிலையங்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாலும், கொள்முதல் பணிகளில் விறுவிறுப்பு இல்லாததாலும் பல நாட்களாக நெல்லை சாலையில் கொட்டி வைத்து காத்துக்கொண்டிருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. அவ்வப்போது பெய்யும் மழையில் நெல்மணிகள் நனைந்து வீணாகி வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில், கொள்முதல் நிலைய சாலையில் விற்பனைக்காக கொட்டப்பட்டிருந்த நெல்மணிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால், ஒவ்வொரு விவசாயிக்கும் 5 முதல் 8 மூட்டை நெல் வரை சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்தும் அரசு அதிகாரிகள் யாரும் நேற்று நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிடக்கூட வரவில்லை. இது எங்களுக்கு கடும் வேதனையை அளித்துள்ளது.

நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், 20 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். ஏற்கெனவே கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.

நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், 20 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். ஏற்கெனவே கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த வேண்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x