Published : 18 Oct 2015 02:19 PM
Last Updated : 18 Oct 2015 02:19 PM
‘இருந்தாலும் பயன், இறந்தாலும் பயன்’ என்பது வாழைக்கும் பொருந்தும். இலை, தண்டு, பூ, காய், கனி அனைத்திலும் பயன்கள் பல இருந்தும், மக்கள் வாழையை முழுமையாக பயன்படுத்துவதில்லை. தேவைகளை உணர்ந்து மதிப்புக்கூட்டு முயற்சிகள் மேற்கொண்டால், வாழை நல்ல வருவாயை ஈட்டித் தரும்.
இதற்காக கோவையில் உள்ள மத்திய வேளாண் பொறியியல் நிறுவன முதன்மை விஞ்ஞானி ரவீந்திரநாயக் பிரத்யேக இயந்திரங்களை உருவாக்கியுள்ளார்.
வாழைத் தண்டிலிருந்து தண்டு, நார், ஜூஸ் அனைத்தையும் தனித்தனியே பிரித்தெடுத்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக நவீன இயந்திரத்தை இவர் வடிவமைத்துள்ளார்.
வாழைத்தண்டை வெட்டி இந்த இயந்திரத்தில் வைத்தால் போதும், அதை வட்ட வடிவ துண்டுகளாக வெட்டித் தருகிறது ‘ஸ்லைசர்’ என்ற இயந்திரம். அதை மேலும் சிறிய கன சதுரத் துண்டுகளாக வெட்டித் தள்ளுகிறது ‘டைஸர்’. வெட்டப்பட்ட வாழைத் தண்டுகளிலிருந்து வாழை நாரைப் பிரித்தெடுக்கிறது நார் பிரிப்புக் கருவி. நார் பிரிக்கப்பட்ட வாழைத்தண்டு துண்டுகளில் நீரை நீக்கி உலர்த்திக் கொடுக்கிறது மைய விலக்கி என்ற இயந்திரம். இறுதியாக வாழைத்தண்டை பிழிந்து சாறு எடுத்துக் கொடுக்கிறது ‘ஜூஸர்’. இப்படி 5 வகைக் கருவிகளை கொண்ட ஒரு சிறிய ரக இயந்திரக் கட்டமைப்பை இவர் வடிவமைத்துள்ளார்.
ரவீந்திரநாயக் கூறியதாவது: வாழையின் ஒவ்வொரு பகுதியும் பெரும் பயனளிக்கிறது. பூவன், ரஸ்தாளி, நேந்திரன், விருப்பாச்சி, கற்பூரவள்ளி, செவ்வாழை, கிராண்ட் நையன், நாட்டுப்பழம் என 20-க்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழகத்தில் 1.25 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வாழை பயிரிட்டு 8.25 மில்லியன் டன் விளைபொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தைத் தொடர்ந்து குஜராத், மஹாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் தண்டு, இலை, பூ, கொத்து தண்டு, நடுநரம்பு என 3-ல் 2 பங்கு அங்கக உயிர்ப்பொருட்கள் இருப்பதால் வயிற்றுக்கல், சிறுநீரகப் பிரச்சினைகள், நரம்பியல் குறைபாடுகள், வயிற்றுப்புண் உள்ளிட்டவற்றுக்கு மருந்தாகவும் உள்ளது. வாழையில் உள்ள சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற தாது உப்புக்கள் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகின்றன. நார்ச்சத்து ஊட்டச்சத்தை கொடுக்கிறது. இதனாலேயே உணவாகவும், உணவு உண்ண இலையாகவும் வாழை பயன்படுகிறது. ஆனால் வாழையை முழுமையாக பயன்படுத்தாமல் ஆண்டுதோறும் தமிழகத்தில் 30 மில்லியன் டன்களுக்கு மேல் வீணாக்கப்படுகின்றன. மதிப்புக் கூட்டல் தொழில்முறைகளையும், பதப்படுத்துதல் முறைகளையும் சரியாகப் பயன்படுத்தினால் இழப்பே இல்லாமல் வாழையைப் பயன்படுத்த முடியும். அப்படிப்பட்ட நோக்கத்தில்தான் இந்த இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன.
வாழைத்தண்டை பல்வேறு விதங்களில் பிரித்தெடுத்து அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி வியாபார ரீதியாக கொண்டு செல்ல இந்த இயந்திரங்கள் பயனளிக்கக்கூடியவை. தனித்தனியே பல்வேறு விதங்களில் வாழைத்தண்டு வியாபார ரீதியாக மதிப்புக்கூட்டப்படுவதால் தொழில்முனைவோர்களுக்கு நல்ல பயனளிக்கும்.
இந்த இயந்திரங்களின் தொகுப்பு விரைவில் சந்தைப்படுத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT