Published : 18 Oct 2020 05:36 PM
Last Updated : 18 Oct 2020 05:36 PM
புதுச்சேரி, தமிழகத்தில் பாஜக நிலை என்ன என்று தெரியும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணியிலுள்ள அதிமுக, என்.ஆர்.காங்கிரஸையும் கடுமையாக சாடியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று (அக். 18) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு பத்து சதவீத இடஒதுக்கீட்டை எடுப்பது வரலாற்று துரோகம். மருத்துவப்படிப்பில் இதை தரும் முடிவு அநீதி. இதுபற்றி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
நான் ஆதாரத்தோடு புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்கும் ஆயத்த வேலைகளை பாஜக செய்து வருவதாக தெரிவித்தேன். பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி மறுத்துள்ளார். உண்மையில் படிப்படியாக புதுச்சேரி மாநில அரசு அதிகாரங்களை மத்திய அரசு கையில் எடுக்கிறது. நிதி அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். நில அதிகாரத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் ஒப்புதல் பெற வேண்டுமென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு இருக்க வேண்டும். நிதி கமிஷனில் சேர்க்கக் கோரியும் பதில் இல்லை. மாநில அந்தஸ்து தர மத்திய அரசு தடையாக உள்ளது.
மாநில அரசின் சேவையை முடக்கப் பார்க்கிறார்கள். அதிகாரத்தைக் குறைத்து இணைக்க பார்க்கிறார்கள். ஆதாரத்துடன் சொன்னதற்கு பாஜகவிடம் பதில் இல்லை.
பாஜகவில் பல அரசியல் கட்சி தலைவர்கள் இணையப் போவதாக சொல்கிறார்கள். மக்களுக்கு புதுச்சேரி பாஜக பலம், பலவீனம் தெரியும். புதுச்சேரி, தமிழகத்தில் பாஜக நிலை என்ன என்று தெரியும். புதுச்சேரி மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் கட்சி பாஜக. புதுச்சேரிக்கான பல திட்டங்களை தடுத்துள்ளனர். பாஜகவை நம்பி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
புதுச்சேரி மாநிலத்தில் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று கூறுவதை அதிமுக நிறுத்திக்கொள்ள வேண்டும். இக்கட்டான சூழலிலும் மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறோம்.
புதுச்சேரி அமைதி பூங்காவாக இருப்பதே இலக்கு. ஒரு சில சம்பவங்கள் நிகழ்ந்ததைக் கொண்டு தவறானப் பிரச்சாரம் நடக்கிறது. ஒரு சிலர் புதுச்சேரியில் பாஜக ஆட்சியைக் கொண்டுவருவோம், பாஜக தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறுகிறார்கள். உண்மையில் பாஜக எங்கே இருக்கிறது என்று தேட வேண்டிய நிலைதான் இங்குள்ளது.
மக்கள் மத்தியில் தவறான தகவலை, அரசு செயல்பாடுகளை சாதனைகளை மறைக்க செயல்படும் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவை மக்கள் புறக்கணிப்பார்கள். மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம். பாடுபடுகிறோம்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT