Published : 18 Oct 2020 04:32 PM
Last Updated : 18 Oct 2020 04:32 PM
புதுச்சேரி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் ஒருவர் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த கோர்காடு எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (36). தனியார் சிம்கார்ட் கம்பெனியில் மொத்த விற்பனையாளராக இருந்து வந்தார். இவருக்கு மதுமிதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதனிடையே, கரோனா காலத்தில் வேலை இல்லாததால் விஜயகுமார் ஆன்லைன் சூதாட்டம் விளைாயடி வந்ததாக கூறப்படுகிறது.
இதில் முதலில் பணம் சாம்பாதித்த அவர், நாளடைவில் தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் இழந்துள்ளார். மேலும், நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடமும் கடன் வாங்கி அவதியடைந்து வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த விஜயகுமார் நேற்று (அக். 17) தனது மனைவியின் செல்போனுக்கு, "என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும். என் செல்போனை வண்டியில் வைத்துள்ளேன்" என ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும், வாட்ஸ் அப் ஸ்டேடசில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஸ்டேடஸ் போட்டுள்ளார். இதையடுத்து, அவரது மனவைி மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் விஜயகுமாரை தேடிவந்துள்ளனர். அவர் கிடைக்காததால் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், இன்று (அக். 18) கோர்காடு அருகே புதுகுப்பம் செல்லும் சாலையில் உள்ள ஏரிக்கரையில் ஒருவர் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடப்பதாக மங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது. இதனையடுத்து, உதவி ஆய்வாளர் சரண்யா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தது விஜயகுமார் தான் என்பதும், அவர் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவித்தனர். தொடர்ந்து, இது குறித்து மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக, காவல் துறை தரப்பில் கேட்டபோது, ஆன்லைன் ரம்மி குறித்த விளையாட்டு குறித்த விளம்பரங்கள் அதிகமாகியுள்ளன எனவும், ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்குக்காக விளையாட ஆரம்பித்தவர்கள் அதற்கு அடிமையாகும் நிகழ்வுகள் அதிகம் நடப்பதாகவும் தெரிவித்தனர். இதனால், லட்சக்கணக்கில் கடன் வாங்கி விளையாடுபவர்கள், அதனை திருப்பிச் செலுத்த முடியாமல், தற்கொலை செய்துகொள்ளும் சோக சம்பவங்களும் நிகழ்கின்றன. இதனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்பதே பல குடும்பங்களின் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT