Published : 18 Oct 2020 07:50 AM
Last Updated : 18 Oct 2020 07:50 AM

நீட் தேர்வு முடிவு வெளியீட்டில் குளறுபடி என மாணவி புகார்: விடைத்தாளில் விடைகள் மாறியிருப்பதாக கோவை மாணவர் தகவல்

அரியலூர்/ கோவை

மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவு வெளியீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக, அத்தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது அரியலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், தனது விடைத் தாளில் விடைகள் மாறியுள்ளதாக கோவை மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் தத்தனூர்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் மணி என்பவரின் மகள் மஞ்சு(19). இவர், அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கடந்த 2019-20-ல் பிளஸ் 2-வில் தேர்ச்சி பெற்றார். பிளஸ் 2-வில் 299 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையிலும், மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பி பிளஸ் 1 சேர்ந்தது முதல் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு மஞ்சு தன்னை தயார் செய்து வந்துள்ளார்.

தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த இவரது தாய் மகாராணி, தனது வேலையை விட்டுவிட்டு, வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக பல வகைகளிலும் தன் மகளுக்கு உதவி புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை நாகை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு பள்ளியில் மஞ்சு எழுதியுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானதில் மஞ்சு 37 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார்.

இதுகுறித்து மஞ்சு நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: நீட் தேர்வில் 3 வினாக்களுக்கு மட்டுமே நான் பதில் எழுதவில்லை. 680 மதிப்பெண்கள் கிடைக்கும் என நான் எதிர்பார்த்திருந்த நிலையில், வெறும் 37 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இது, நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் 3 வினாக்களுக்கு மட்டுமே பதிலளிக்காத நிலையில், 7 வினாக்களுக்கு பதில் அளிக்கவில்லை என தேர்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எனது விடைத்தாள் (ஓஎம்ஆர் ஷீட்) மாற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது எனத் தெரியவில்லை என்றார்.

நீட் தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியான நிலையில், அதற்கு முன்பாக நீட் தேர்வின் ஓஎம்ஆர் விடைத்தாள் பிரதி, விடைகள் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டன. அப்போது, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவர் மனோஜ், தனது விடைத்தாளை பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார்.

இந்நிலையில், தேர்வு முடிவு வெளியான நேற்று முன்தினம் இரவு மீண்டும் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார். இரண்டிலும் விடைகள் மாறியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவர் மனோஜ் கூறியபோது, “இரண்டு விடைத்தள் நகல்களிலும் எனது பதிவெண், கையெழுத்து ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளன.

ஆனால், ஒரே கேள்விக்கு முதலில் வெளியிடப்பட்ட விடைத்தாள் பிரதியில் ஒரு பதிலும், தற்போது பதிவிறக்கம் செய்த விடைத்தாளில் வேறு ஒரு பதிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பெரும்பாலான கேள்விகளுக்கான பதில்கள் மாறியுள்ளன.

முதலில் பதிவிறக்கம் செய்த விடைத்தாளில் கிடைத்த மதிப்பெண்களை பார்த்த நான், எப்படியும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும் என்றிருந்தேன். ஆனால், பின்னர் பதிவிறக்கம் செய்த விடைத்தாள் நகலில் உள்ள மதிப்பெண், எனது மருத்துவக் கனவை சிதைக்கும் வகையில் உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x