Published : 16 Sep 2015 10:46 AM
Last Updated : 16 Sep 2015 10:46 AM

‘விற்க வாங்க டாட்காம்’ - தமிழில் உலா வரும் வியாபார இணையதளம்: முத்துப்பேட்டை இளைஞரின் புதிய முயற்சி

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையை மையமாகக் கொண்டு, தமிழில் வியாபார இணையதளம் தொடங்கி தற்போது வெற்றிகரமாக நடத்தி வரும் முகமது ரியாஸ், மற்ற இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறார்.

இன்றைய உலகில் இணையதள பயன்பாடின்றி எதுவும் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. சீனா, ஜப்பான் போன்ற நாட்டினர் தங்களுடைய தாய் மொழியிலேயே வியாபார இணையதளங்களை வடிவமைத்து அதில் வர்த்தக ரீதியாக வெற்றியும் பெற்றுள்ளனர்.

நம்நாட்டிலும் புதிய, பழைய பொருட்கள் வாங்க விற்க ஏராள மான இணையதளங்கள் பயன்பாட் டில் உள்ளன. இவையனைத்தும் பெரும்பாலும் ஆங்கில மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல் படுகின்றன. பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கும், ஆங்கிலம் அறிந்தவர்களுக்கும் இவை மிகவும் வசதியாக உள்ளது. இதேபோல சிறு, குறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழ்பவர்களையும், தமிழ் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களையும் இணையதள வியாபாரத்தில் இணைக்கும் வகையில் >‘விற்க வாங்க டாட்காம்’ என்று தமிழில் வியாபார இணையதளத்தை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த முகமது ரியாஸ் (28) தொடங்கியுள்ளார்.

இதில் மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள், புத்தகங்கள், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் தனித்தனியே தமிழில் பதிவேற்றம் செய்துள்ளார். இதன்மூலம் தங்களிடம் இருக்கும் புதிய பழைய பொருட்களை விற்பவர், வேலை தேடுவோர், தொழில் துறையில் சாதிக்க விரும்புவோர் என பலதரப்பட்ட தமிழ் மக்களை இணைக்கும் பாலமாக இந்த இணையதள முகவரி செயல்படுகிறது.

தொடங்கிய 3 மாதத்தில் இதுவரை 93 ஆயிரத்துக்கு மேற் பட்டோர் பார்வையாளர்களாகவும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான பயனா ளர்களும் இந்த இணையதளத்தில் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் முகமது ரியாஸ் கூறியதாவது:

‘‘மீன்பிடி தொழிலை பாரம் பரியமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த நான், அரசுப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தேன். தொடர்ந்து எம்.பி.ஏ. முடித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஓராண்டு வேலை செய்தேன். அடுத்து கத்தார் நாட்டில் கணக்காளராகப் பணியாற்றினேன். ஏனோ அந்தப் பணியும் சம்பளமும் மனதுக்கு ஏற்றதாக இல்லை.

செல்போனிலும் பயன்படுத்தலாம்

இதையடுத்து கடந்த மே மாதம் சொந்த ஊருக்கு வந்து, ‘விற்க வாங்க டாட்காம்’ வியாபார இணையதளத்தை தமிழில் தொடங் கினேன். இன்றைக்கு இன்டர்நெட் இல்லாத இடமே இல்லை. அதனால் இணையம் சார்ந்த இதுபோன்ற தொழிலுக்கு சென்னை போன்ற நகரம் தேவையில்லை. முத்துப் பேட்டையே போதும், செலவும் குறைவுதான். எந்த ஒரு மனிதனுக்கும் தாய்மொழியில் தொடர்புகொள்வது விருப்பமான ஒன்று என்பதால் தமிழில் இந்த இணையதளத்தைத் தொடங்கி னேன். செல்போனில் தொடர்பு கொள்ளும்விதமாக விற்க வாங்க டாட்காமின் ஆன்ட்ராய்டு அப்ளி கேஷனை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளேன்’’ என்றார் முகமது ரியாஸ்.

முகமது ரியாஸ்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x