Published : 17 Oct 2020 09:39 PM
Last Updated : 17 Oct 2020 09:39 PM

'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர் ஜீவித் குமாருக்கு உதவிய சபரிமாலா சிறப்புப் பேட்டி 

அரசுப் பள்ளியில் படித்து அகில இந்திய அளவில் நீட் தேர்வில் 664 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் தேனியைச் சேர்ந்த மாணவர் ஜீவித் குமார்.

நீட் தேர்வை எதிர்த்தும் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் தனது ஆசிரியப் பணியைத் துறந்த சபரிமாலா, தன்னார்வலர்கள் உதவியுடன் ஜீவித் குமாரைப் படிக்க வைத்து, வெற்றிவாகை சூட வைத்திருக்கிறார். அரசுப் பணியை விட்டு, வீடு திரும்பாத போராட்டத்தை அறிவித்த சபரிமாலா, 3 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

ஜீவித் குமாரின் வெற்றி குறித்தும் நீட் தேர்வு, அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை குறித்தும் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் விரிவாகப் பேசினார் சபரிமாலா.

ஜீவித் குமாரை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

தேனி மாவட்டம், சில்வார்பட்டியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அருள்முருகன் என்னிடம் ஜீவித் குமார் பற்றிப் பேசினார். '10-ம் வகுப்பில் 494 மதிப்பெண்கள், 12-ம் வகுப்பில் 548 மதிப்பெண்கள் பெற்ற ஜீவித் குமார், நீட் தேர்வைப் படிக்க ஆர்வமாக உள்ளதாகக் கூறுகிறான்' என்றார். அடுத்த நாளே தேனிக்குச் சென்று ஜீவித் குமாரிடம் பேசினேன். பள்ளிக்கு முன்பாக நின்று, 'உன்னைப் பிச்சை எடுத்தாவது படிக்கவைக்கிறேன். பதிலுக்கு என்ன செய்வாய்?' என்று கேட்டேன். 'நீட் தேர்வில் வெற்றி பெற்று, பிற மாணவர்களைப் பயத்தில் இருந்து போக்குவேன்' என்றான்.

செல்லும் இடங்களில் எல்லாம் ஜீவித் குமார் குறித்துப் பேசி, நிதி திரட்டி, சில்வார்பட்டி ஆசிரியர்களுடன் சேர்ந்து நாமக்கல் தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்துப் படிக்க வைத்தோம். இன்று முழுவதுமாக மெரிட் அடிப்படையில் மருத்துவ இடத்தை ஜீவித் குமார் உறுதி செய்துள்ளார்.

இந்த வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?

எனக்கு மிகுந்த ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. அனிதாவின் வெற்றிடத்தை ஓர் அரசுப் பள்ளி மாணவனைக் கொண்டு நிரப்பியதாக உணர்கிறேன். 'ஐயம் ட்யர்ட்' என்று சொல்லி இறந்துபோன மாணவர்களின் வலிக்கு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாக உணர்கிறேன்.

ஜீவித்தின் வெற்றி மாணவர்களின் தற்கொலைகளுக்கு எதிரான வெற்றி . நீட் தேவையில்லைதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதற்காக நாங்கள் கோழைகளாகச் செத்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதை உரக்கச் சொல்லும் வெற்றி.

ஆனால் ஒரு சாரார் 'நீட் தேர்வு மாணவர்களின் வரம். ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் வெற்றி' என்றெல்லாம் கொண்டாடத் தொடங்கி இருக்கின்றனர். இது 100 சதவீதம் பொய். இது ஜீவித் குமாருக்கு மட்டுமல்ல அவருக்கு உதவிய எங்கள் அனைவருக்குமான வெற்றி. அனிதாவின் வெற்றி. எந்தப் பிள்ளைகளின் மரணத்தைக் காதல் தோல்வி என்று ஒரு கூட்டம் பேசியதோ, அவர்களுக்காக ஒருவன் ஜெயித்து வரும்போது அதே கூட்டம் கொண்டாடுகிறது. இனி நீட் வேண்டாம் என்று எங்கள் பிள்ளைகள் அடித்து நொறுக்குவார்கள்.

நீட் வேண்டாம் என்று சொல்கிற நீங்கள் ஜீவித் குமார் போல் எத்தனை பேரை உருவாக்க முடியும் என நினைக்கிறீர்கள்?

ஜீவித் குமார் தேர்ச்சி பெறாமல் இருந்திருந்தால் எங்களின் குரல் யாருக்கும் கேட்டிருக்காது. நீட் வேண்டாம் என்றோ, தேர்வு இருந்தால் என்ன எங்களுக்குத் தேவை என்பதையோ ஜீவித் குமார் மூலம் உரக்கச் சொல்கிறோம்.

அனிதாவின் கிராமத்துக்கு மருத்துவராகச் சென்று பணியாற்றுவேன் என்று ஜீவித் குமார் வாக்குக் கொடுத்திருக்கிறான். அனிதாவின் இடத்தை நிரப்புவதாகச் சொல்லி இருக்கிறான். ஆனால், இந்த வாய்ப்பை எத்தனை பேருக்கு உருவாக்கிக் கொடுக்க முடியும்? எத்தனை மாணவர்களுடன் உடன் நிற்க முடியும்? அதனால்தான் நீட் வேண்டாம் என்று சொல்கிறோம். ஆனாலும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்வரை அரசுப் பள்ளி மாணவர்களை மருத்துவராக்குவோம்.

வருங்காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமுள்ளதா?

ஜீவித் குமார் தலைமையில் அனிதா அகாடமியைத் தொடங்க உள்ளோம். ஜீவித் அதில் பாடம் எடுப்பான். 2013-ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, வேலை கிடைக்காத ஆசிரியர்களை வைத்து இலவசமாகக் கற்பிப்போம். தமிழகம் முழுவதிலும், ஆற்றலுடன் கிராமங்களில் ஒளிந்திருக்கும் 100 மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பயிற்சி அளிக்க உள்ளோம். நீட் பற்றி எதுவும் தெரியாமல்தான் ஜீவித்தைத் தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்துப் படிக்க வைத்தோம். இனி நாங்களே கற்றுத் தருவோம்.

மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மாணவர்களைத் தாண்டி ஆசிரியர்களுக்குச் சிலவற்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன். நீட் தேர்வுக்காக மட்டும் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 12 ஆண்டுகளில் ஒரு ஆசிரியராவது தன்னம்பிக்கையை, எழுச்சியை, தைரியத்தை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தால் இது நடந்திருக்காதே. ஆசிரியர்கள் மாணவர்கள் மீது இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இதில் அரசின் கடமையும் பங்கும் என்ன?

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் நீட்டை அரசியலாக்காமல் மாணவர்களின் கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். முழுமையான நீட் பாடத்திட்டத்தை முன்கூட்டியே கொடுக்க வேண்டும். என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு முறையாகப் பயிற்சி அளித்துக் கற்பித்தலை நிகழ்த்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் நீட் பயிற்சி மையத்தை உருவாக்கி, அதற்குத் தரமான ஆசிரியரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு சபரிமாலா தெரிவித்தார்.

இதுகுறித்துச் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் கூறும்போது, ''ஜீவித் குமாரிடம் தேடலும் அதற்கான ஐ.க்யூ.வும் இருந்தன. அதனால் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து அவனைப் படிக்க வைக்க முடிவு செய்தோம். அரசுப் பள்ளி என்பதால், யாராவது வந்து எங்கள் மாணவர்களுக்கு உதவ மாட்டார்களா என்று நினைத்தபோதுதான் சபரிமாலா வந்தார். ஜீவித்துக்கு ஊக்கம் அளித்தார்.

என் சார்பில் ரூ.20 ஆயிரம், பிற பாட ஆசிரியர்கள் சார்பில் தலா ரூ.5 ஆயிரம் எனத் திரட்டி தனியார் பயிற்சி மையத்துக்கு முதல்கட்டப் பணத்தைக் கட்டினோம். சபரிமாலா அவர் பங்குக்கு எல்லா உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். இன்று தன் கடுமையான உழைப்பால் மருத்துவராவதன் முதல் புள்ளியில் ஜீவித் குமார் இருக்கிறார். இதன்மூலம் முறையான வழிகாட்டல் இருந்தால் அரசுப் பள்ளி மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகி நிற்கிறார் ஜீவித்'' என்றார் ஆசிரியர் மோகன்.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x