Published : 28 Sep 2015 03:29 PM
Last Updated : 28 Sep 2015 03:29 PM
திக்கணங்கோடு அருகில் உள்ள மணலிக்குழிவிளை மக்கள் ஆலய திருவிழாவின் போது ஆயர் ஜெரோம்தாஸ் முன்னிலையில் மதுவுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். மது ஒழிப்புப் பணிகள் தேவாலயங்களில் தொடங்கி யிருப்பது ஆரோக்கியமான விஷயம் என சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
மணலிக்குழிவிளை தூய மிக்கேல் தூதர் ஆலய 10 நாள் திருவிழா, கடந்த 25-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. 3-ம் நாள் விழாவான நேற்று ஆயர் ஜெரோம்தாஸ் தலைமை வகித்து மறை உரையாற்றினார். குழந்தைகளுக்கு முதல் திருவிருந்து வழங்கினார்.
திருப்பலியின் இறுதி நிகழ்ச்சி யாக ‘மது அருந்த மாட்டோம்’ என்ற உறுதிமொழியினை ஆயர் வாசித்தார். தொடர்ந்து பங்கு மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கைகளை நீட்டி மது அருந்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து பேசிய ஆயர் ஜெரோம்தாஸ், “இது இறைப்பணி மட்டுமல்ல. இந்நேரத் தில் முக்கியமான சமூகப்பணி. இது தான் உண்மையான மது ஒழிப்பு பணி. நாம் முதலில் நம்மை மாற்றுவோம். அதன் வழியாக இந்த சமூகத்தை மாற்றுவோம்.
உடல் நலக்கேட்டுக்கும், சமூகவிரோதச் செயல்களுக்கும், விபத்துகளுக்கும் மது போதை முக்கிய காரணமாக உள்ளது” என்றார். முன்னதாக பங்குதந்தை கிறிஸ்துராஜ், அருட்பணிப் பேரவை துணைத் தலைவர் ராஜேந்திரன், ஓலக்கோடு ஜான் ஆகியோர் ஆயருக்கு வரவேற்பு அளித்தனர். அருட்பணிப் பேரவை செயலாளர் விஜி, துணைச் செயலாளர் சுகுமாறன் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT