Published : 17 Oct 2020 06:45 PM
Last Updated : 17 Oct 2020 06:45 PM
கடைகளில் தரமில்லாத பலகாரங்கள், உணவுப்பொருட்கள் மாதிரிகளை எடுத்து வியாபாரிகள் முன்பே பரிசோதனை செய்து அதன் தரத்தை உடனுக்குடன் கண்டறிவதற்கு, மதுரை உள்பட 4 முக்கிய நகரங்களில் முதல் முறையாக உணவுப்பாதுகாப்பு துறை சார்பில் நடமாடும் ஆய்வகங்களை அறிமுகம் செய்துள்ளது.
சுகாதாரமான உணவு, பலகாரங்கள் தயாரிப்பிற்காக உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு, அதை அமல்படுத்த உணவு பாதுகாப்புத் துறையும் உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்கள் தோறும் இந்தத் துறைக்கு தலைமை அதிகாரியாக எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் ஒருவர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது தலைமையில் அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் சுகாதாரமான முறையிலும் கலப்படமற்ற முறையிலும் உணவுகள், பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்கிறதா? என்று உணவு தயாரிக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வார்கள்.
மேலும், தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்டவர்களின் உரிமத்தை ஆய்வு செய்து உரிமம் பெறாமல் நிறுவனத்தை நடத்தினால் அவர்கள் மீது உணவு பாதுகாப்ப சட்டம்படி நடவடிக்கை எடுப்பார்கள். தரமில்லாத உணவு பொருட்களை உற்பத்தி செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், உரிமத்தை ரத்து செய்யவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பார்கள்.
முன்பு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கடைகளுக்கு சென்று பாதுகாப்பான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்து கலப்படம் உள்ள பொருட்கள் மாதிரியை எடுத்து சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.
அந்த உணவு மாதிரிகளின் ஆய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பார்கள். தரமில்லாத உணவுப்பொருள் தரத்தை அதிகாரிகள் உடனுக்குடன் கண்டறிய முடியாமலும், அதன் முடிவுகள் வரவதற்கு தாமதமும் ஏற்பட்டது.
இந்நிலையில் மதுரை, சென்னை, திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட மாநகரங்களில் தரமில்லாத பலகாரங்கள், உணவுப்பொருட்கள் மாதிரிகளை எடுத்து வியாபாரிகள் முன்பே உடனுக்குடன் பரிசோதனை செய்து கலப்படத்தை கண்டறிவதற்கு, உணவுபாதுகாப்பு துறை சார்பில் நடமாடும் ஆய்வகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘உணவு பகுப்பாய்வு கூடத்தில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த நடமாடும் ஆய்வகத்தில் உள்ளது. வியாபாரிகள் கண் முன்பே மாதிரிகளை எடுத்து 15 நிமிடங்களில் ஆய்வு முடிகளை வழங்கவிட முடிகிறது.
முன்பு மாதிரிகளை சென்னைக்கு அனுப்பி வைப்பதால் அதன் முடிவுகள் வருவதற்கு 14 நாட்கள் ஆகும். ஆனால், சட்டரீதியாக தரமில்லாத உணவு உற்பத்தி, விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க இந்த நடமாடும் ஆய்வு முடிவுகள் போதுமான ஆதாரமாக இருக்கும்.
அதற்கு சென்னைக்குதான் அனுப்ப வேண்டும். இது வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், அவர்கள் விற்பனை செய்யும் பொருள் தரமில்லை என்பதை நிரூபித்து தேவைப்பட்டால் மாதிரியை சென்னைக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கலாம்.
உணவு தரமில்லை என்பதை உடனடியாக கண்டுபிடிக்க இந்த நடமாடும் ஆய்வகம் உதவுகிறது. வியாபாரிகள், விற்பனையாளர்களுக்கு அவர்கள் விற்பனை செய்யும் பொருள் தரமில்லை என்பதை விழிப்புணர்வு செய்யவும், தொடர்ந்து அவர்கள் இதுபோல் விற்பனை செய்வதை தடுக்கவும் உதவுகிறது.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பெற்றோரும் குழந்தைகளுக்கு இனிப்பு, கார வகைகளை வாங்கிக் கொடுப்பர். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், உறவினர்களுக்கு வாங்கி கொடுப்பார்கள். அவர்களுக்கு தரமான உணவுப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடமாடும் ஆய்வகம் உதவுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT