Published : 17 Oct 2020 05:32 PM
Last Updated : 17 Oct 2020 05:32 PM
கோவையில் நொய்யல் ஆற்றங்கரையோரம் அனுமதியின்றி இயங்கி வந்த சாயப்பட்டறையின் செயல்பாட்டை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிறுத்தியுள்ளது.
கோவை மாநகரக் குடியிருப்புகளின் சாக்கடைக் கழிவுகளால் ஏற்கெனவே நொய்யல் ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால், மாநகரைக் கடந்ததும் நொய்யல் ஆற்று நீர் எந்த வகையிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இந்நிலையில், நொய்யல் ஆற்றங்கரையோரம் மாதம்பட்டி அருகே குனியமுத்தூர் தடுப்பணையிலிருந்து 30 மீட்டர் தொலைவில் ஒரு சாயப்பட்டறை செயல்பட்டு வந்துள்ளது. இந்த சாயப்பட்டறையிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றி வந்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்து, சாயப்பட்டறையின் செயல்பாட்டை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நிறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, "சாயப்பட்டறையின் செயல்பாடு தற்போது முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி சாயப்பட்டறையை இயக்கிய உரிமையாளர் மீதும், சாயப்பட்டறை செயல்பட்ட நிலத்தின் உரிமையாளர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஓரிரு நாட்களில் சாயப்பட்டறை முழுமையாக இடித்து அகற்றப்படும்" என்றனர்.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் கூறும்போது, "சாயப்பட்டறைகள் குறித்து முன்பு புகார் தெரிவித்தபோது, ஆற்றங்கரையோரமும், நீர்நிலைகளுக்கு அருகிலும் எந்த சாயப்பட்டறையும் இல்லை என்று தெரிவித்தனர். அதன்பிறகு ஒவ்வொரு முறையும் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வெள்ளலூர் அணைக்கட்டு, சிங்காநல்லூர் அணைக்கட்டு, பட்டணம் அணைக்கட்டில் நுரை பொங்கி வழிந்து வருகிறது.
உக்கடம் குளத்துக்குத் தண்ணீர் வரும் வாய்க்காலில் வரும் நீரும் அவ்வப்போது நிறம் மாறுகிறது. எனவே, தொடர்ந்து பல இடங்களில் ஆய்வு செய்து சாயப்பட்டறைக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் நொய்யலில் கலக்கிறதா என்பதைக் கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT