Last Updated : 17 Oct, 2020 04:19 PM

 

Published : 17 Oct 2020 04:19 PM
Last Updated : 17 Oct 2020 04:19 PM

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மணல் கடத்திய 3553 வாகனங்கள் பறிமுதல்: 3717 வழக்குகள் பதிவு; ரூ. 74 லட்சம் அபராதம் வசூல்- உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை

ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை மணல் கடத்தல் தொடர்பாக 3717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3553 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை உட்பட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிகார வரம்பிற்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. தமிழக தொழில்துறை முதன்மை செயலர் பதில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுக்க கனிவளத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மணல் கொள்ளையை தடுப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு உத்தரகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கனிமவள உதவி இயக்குனர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 3553 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.74,26,958 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், மணல் கடத்தல் தடுக்கும் விதமாக கனிமவளச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளை 4 வாரத்தில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x