Published : 17 Oct 2020 03:34 PM
Last Updated : 17 Oct 2020 03:34 PM
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா பெரும் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
தசரா விழா:
இந்தியாவில் கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் கோயிலில் தான் தசரா திருவிழா சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள்.
கொடியேற்றம்:
இந்த ஆண்டு இத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிப்பட்டம் கொண்டுவரப்பட்டு 10.45 மணிக்கு கோயில் முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்துக்கு பால், பழம், பன்னீர், விபூதி, இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகமும், ஷோடசம் உள்ளிட்ட பல்வேறு தீபாராதனைகளும் நடைபெற்றன. பகல் 12 மணிக்கு அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் மாவட்டம் நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கொடியேற்றத்தில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்தப்படவில்லை. மேலும் கோயிலைச் சுற்றியுள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. திருச்செந்தூர், உடன்குடி மற்றும் கன்னியாகுமரியில் இருந்து குலசேகரன்பட்டினம் வரும் அனைத்து சாலைகளும் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டு பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சூசம்ஹார கடற்கரை மற்றும் கடற்கரை செல்லும் சாலையில் உள்ள அனைத்து தெருவோர தற்காலிக கடைகளும் முழுமையாக நேற்றே அப்புறப்படுத்தபட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் அப்பகுதிகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன. கொடியேற்ற நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் ராதிகா குமார், கோயில் நிர்வாக அதிகாரி ரத்தினவேல் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
தரிசனத்துக்கு அனுமதி:
மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு 8 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் 2-ம் நாளான நாளை (அக்.18) முதல் வரும் 25-ம் தேதி வரை இணைய வழியில் பதிவு செய்த பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தினமும் இரவு 8 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதகிருஷ்ணர், மகிஷாசூரமர்த்தினி, ஆனந்த நடராஜர், கஜலட்சுமி, கலைமகள் திருக்கோலங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
சூரசம்ஹாரம்:
திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் 10-ம் திருவிழாவான அக்டோபர் 26-ம் தேதி நடைபெறும். இதையொட்டி அன்று காலை 10.15 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கோயில் முன் எழுந்தருளி மகிஷாசூரனை சம்ஹாரம் செய்வார். 27-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு உற்சவமூர்த்தி அம்மன் அபிஷேக, ஆராதனைக்கு எழுந்தருளலும், 6 மணிக்கு அபிஷேக ஆராதனையும் நடைபெறும். மாலை 5 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்பட்டு காப்பு களைதல் நடைபெறும்.
கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் கோயில் மற்றும் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. தசரா குழு நிர்வாகிகள் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் பதிவு செய்து தேவையான காப்புக் கயிறுகளை வாங்கிச்சென்று கிராமங்களில் உள்ள கோயில்களில் வைத்து காப்பு அணிந்து வேடமிட்டுக்கொள்ளலாம். தசரா குழுவினர் தங்கள் கிராமங்களைத் தவிர மற்ற கிராமங்களுக்கு செல்ல அனுமதியில்லை. கோயிலில் அக்டோபர் 27-ம் தேதி கொடியிறக்கப்பட்டவுடன் வேடமணிந்த பக்தர்கள் தங்கள் ஊரில் உள்ள கோயில்களில் வைத்து காப்பு களையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு வேண்டுகோள்:
கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இணைய வழியில் பதிவு செய்து வரும் அனைத்து பக்தர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் சுகாதாரத்துறை மூலம் பரிசோதனைக்குப் பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் பூ, மாலை, பழம் கொண்டு வர அனுமதியில்லை. மேலும், இதுபோன்று திருக்கோயில் நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி தசரா விழாவை சிறப்பாக கொண்டாட பக்தர்கள் ஓத்துழைக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT