Published : 12 Mar 2014 11:41 AM
Last Updated : 12 Mar 2014 11:41 AM
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் முன்பு, ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அரசியல் கட்சிகள் முன்அனுமதி பெற வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், புதன்கிழமையன்று தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல் வந்தது. இதையடுத்து அதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அக்கட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த சிலர் என்னைச் சந்தித்து விளக்கம் அளித்தனர். சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்பு ‘ஊடக சான்றும் மற்றும் கண்காணிப்புக் குழு’ அனுமதியும் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்தக் குழுவிடம் அனுமதி பெற்ற பிறகே சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.கவுக்கு அறிவுறுத்தினேன். இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்.
நாகையில் பிடிபட்ட 7 கிலோ தங்கம்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் இதுவரை ரூ.2 கோடியே 16 லட்சத்து 47 ஆயிரத்து 750 பறிமுதல் செய்துள்ளன. ரூ.47 லட்சத்து 18 ஆயிரத்து 660 மதிப்புள்ள சேலைகள், நகைகள், வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்படும்போது அனைத்து நடைமுறைகளும் வீடியோவில் பதிவு செய்யப்படுகின்றன. பறிமுதல் செய்யப்பட்ட பணமும் பொருட்களும் அரசு கஜானாவில் சேர்க்கப்படும்.
நாகப்பட்டினத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் செவ்வாய்க்கிழமை பிடிபட்ட 7 கிலோ தங்கம் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்படும்.
25-ம் தேதி வரை பெயர் சேர்க்கலாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் வரும் 25-ம் தேதி வரை தாசில்தார் அலுவலகம் அல்லது மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். கடந்த 9-ம் தேதி நடந்த சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9.95 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தேர்தலுக்கு முன்பு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை தர இயலாது. எனவே, புகைப்படத்துடன்கூடிய பூத் சிலிப் தரப்படும். அதனைக் கொண்டு புதிய வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.
12,947 வழக்குகள்
அனுமதியில்லாமல் சுவர்களில் சுவரொட்டி ஒட்டியது, பொதுஇடங்களில் பேனர் வைத்தது, சுவர் விளம்பரம் மூலம் பொது மற்றும் தனியார் சுவர்களை அசுத்தம் செய்தது போன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 12,947 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கட்சிக்காரர்களுக்கு பிரியாணி கொடுத்தால் தப்பில்லை. பொதுமக்களுக்கு பிரியாணி கொடுத்தால் அது நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும். மாநகராட்சி மேயர் பொதுமக்க
ளிடம் மனுக்கள் பெறுவதும் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகவே கருதப்படும்.
வங்கிகளுக்கு உத்தரவு
கணிசமான தொகை பணப் பரிவர்த்தனை (ரூ.1 லட்சத்துக்கு மேல்) நடந்தால், அதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் உடனடியாக தெரிவிக்க
வேண்டும் என்று அனைத்து வங்கி நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளோம். ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையகம் போன்றவற்றில் மொத்த கொள்முதல் செய்யப்படுவதும் கண்காணிக்கப்படுகிறது. திடீரென தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக நிவாரணம் அளிப்பதில் தவறில்லை. நிரந்தர நிவாரணம் அளிக்கக்கூடாது.
வேட்பு மனு
நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் வரும் 29-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை வேட்பு மனுதாக்கல் செய்யலாம். அனைத்து வேலைநாட்களிலும் பகல் 11 மணி முதல் 3 மணி வரை மனுத்தாக்கல் செய்யலாம். வரும் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், 31-ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பு என்பதாலும் அந்த 2 நாட்கள் மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியாது. இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT