Published : 17 Oct 2020 01:20 PM
Last Updated : 17 Oct 2020 01:20 PM
கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சோதனையைத் தொடர்ந்து துணை தாசில்தார் உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை பாலசுந்தரம் சாலையில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. தினமும் பல்வேறு பணிகள், கோரிக்கைகள் தொடர்பாக அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேஷ் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், நேற்று (அக். 16) மாலை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். வந்தவுடன் அலுவலகத்தின் பிரதான கதவுகளை மூடினர். அந்த சமயத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தார். அங்கிருந்த தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்தனர்.
வட்டாட்சியர் மற்றும் ஊழியர்களிடம் இருந்த செல்போன்களை வாங்கி சுவிட்ச் ஆஃப் செய்து வைத்தனர். வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மற்ற ஊழியர்களின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் குழுவாகப் பிரிந்து சோதனை நடத்தினர்.
கணக்கில் வராத தொகை ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என அலுவலகத்தில் உள்ள கோப்புகள், மேஜை டிராயர்கள், வட்டாட்சியரின் வாகனம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர்.
மேலும், இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.86 ஆயிரம் தொகை மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சோதனை இன்று (அக். 17) காலை 9 மணிக்கு நிறைவடைந்தது.
வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் நடந்த சோதனையைத் தொடர்ந்து, கணக்கில் வராத தொகை கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தைச் சேர்ந்த துணை தாசில்தார், 2 வருவாய் ஆய்வாளர்கள், சர்வேயர், விஏஒ, உதவியாளர், பதிவு எழுத்தர் என 7 அரசு ஊழியர்கள் மற்றும் ஒரு இடைத்தரகர், தன்னிச்சையாக இவர்கள் வேலைக்கு வைத்த அலுவலக உதவியாளர், தற்காலிக ஓட்டுநர் என 3 தனி நபர்கள் உட்பட 10 பேர் மீது கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் தற்காலிக ஊழியர்கள் இருவர் லஞ்சத் தொகையைப் பெற்றுத் தருவதற்காகப் பணிக்கு அமர்த்தி, பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT